கொல்லம், ஜனவரி 5 – பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களுக்கு முன் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலத்தை அதிகரிப்பதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் ஒரு பகுதியாக திரையுலக பிரபலங்களை கட்சியில் சேர்த்து அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் விரும்புவதாக தெரிகிறது. இதனால் கேரளாவில் முன்னணியில் விளங்கும் சில திரையுலக பிரபலங்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, “ஆரனமுல்லா விமான நிலைய விவகாரம் குறித்து நான் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறேன்”.
“இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் காங்கிரசார் எனக்கு எதிராக போராட்டம் நடத்தி எனது உருவ பொம்மையை எரித்தனர். அப்போது என் நெஞ்சம் உடைந்துவிட்டது. அதன் பின்னர் என்னுடைய அரசியல் பார்வையும் மாறிவிட்டது”.
“பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பங்களை நிறைவேற்ற நான் விரும்புகிறேன். ஆனால் இது தொடர்பாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அது குறித்து மோடி தான் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மோடியின் விருப்பங்களை நிறைவேற்ற தயார் என்று சுரேஷ் கோபி கூறியிருப்பதன் மூலம் அவர் பா.ஜ.கவில் விரைவில் சேரக்கூடும் என கூறப்படுகிறது. இதைப் போல கேரளாவின் பிரபல நடிகர் லாலு அலெக்ஸ் உள்ளிட்ட சிலரும் பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.