துபாய், ஜனவரி 5 – 2013-ஆம் ஆண்டின் உலகத்தின் மிகப்பெரிய நன்கொடையாளர் எனற தகுதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுள்ளது. உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனது நாட்டின் ஒட்டு மொத்த வருவாயில் (Gross National Income) சுமார் 1.34%, அதாவது யுஏஇ திர்கம் மதிப்பில் 19.84 பில்லியன், சுமார் 5.4 பில்லியன் அமெரிக்க டாலரை உலக வளர்ச்சிக்காக செலவிட்டதால் இந்த இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுள்ளது.
இது வரை 1961-ஆம் ஆண்டு பிரான்ஸ் தனது நாட்டின் ஒட்டு மொத்த வருவாயில் இதே போன்ற அளவிலான தொகையை தனது உலக மேலான்மை நிதியின் மூலமாக உலக வளர்ச்சிக்கென செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) வளர்ச்சி மற்றும் உதவிக்குழு இதற்காக அமீரகத்தை பாரட்டியுள்ளது. மேலும் இந்த குழுவின் அறிக்கைப்படி அமீரகத்திற்கு அடுத்த நிலையில் 1.07% உலக வளர்ச்சிப்பணி உதவியுடன் நார்வே இரண்டாம் இடததைப் பிடித்துள்ளது.
1.01% பங்குடன் ஸ்வீடன் மூன்றாம் இடத்திலும், 1% பங்குடன் லக்சம்பர்க் நான்காம் இடத்திலும், 0.85%, 0.71%, 0.67% என்ற பங்குகளுடன் டென்மார்க், இங்கிலாந்து, ஹாலந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
2013-ஆம் ஆண்டின் தனது அதிகாரப்பூர்வ வளர்ச்சிப்பணி நிதியுதவியாக நாட்டின் ஒட்டு மொத்த வருவாயில் 1.34% பங்களித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கான 0.7 சதவிகிதத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.