கோலாலம்பூர், ஜனவரி 6 – கட்சியை நடத்துவதிலோ அல்லது மஇகா நிர்வாகத்திலோ தனது மனைவியும் குடும்பத்தாரும் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார். தன் குடும்பத்தார் தொடர்பில் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறவர்கள் இச்செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“சில தனி நபர்கள் என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் சுமத்தியுள்ள பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன. பதவியில் இருந்து விலக்கப்பட்டவர்களின் எதிர் நடவடிக்கையே இச்செயல் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்,” என்று பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.
சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க சந்திரா என்ற வழக்கறிஞரை தாம் நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதில் வழக்கறிஞர் சந்திரா மிகுந்த அனுபவம் மிக்கவர் என்றார்.
“நானோ அல்லது துணைத்தலைவரோ இந்த சட்ட விவகாரத்தைக் கையாள தகுதி பெற்றவர்கள் அல்ல. எனவே மஇகா சார்பாக ஒரு வழக்கறிஞரை நியமித்து, சங்கப் பதிவிலாகா விவகாரங்களைக் கவனிப்பதில் எந்தத் தவறும் இல்லை. தற்போதுள்ள மத்தியச் செயலவை செல்லுபடியாகுமா என்பதே சங்கப்பதிவதிகாரி உத்தரவால் எழுந்துள்ள பிரச்சினை. எனவே மத்திய செயலவைதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனும் கேள்வி எழ வாய்ப்பில்லை,” என்றும் பழனிவேல் விளக்கம் அளித்துள்ளார்.
தனிப்பட்ட வகையில் ஆதாயம் காணும் நோக்கத்துடன், பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி கட்சியினரைக் குழப்ப வேண்டாம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கட்சித் தேர்தலில் தோல்வி கண்ட சிறு குழுவினரே சங்கப்பதிவிலாகாவில் கட்சி இன்று பிரச்சினையை எதிர்நோக்க காரணம் என்று கூறியுள்ளார்.
“ஜனநாயக ரீதியில் செயல்படும் எல்லா கட்சிகளிலுமே இத்தகைய விவகாரங்கள் எழுவது சகஜம்தான். பெரும்பான்மை உள்ளவர்கள் வெற்றி பெறுவதும், அதனால் சிறு குழுவினர் அதிருப்தி அடைவதும் வாடிக்கை. இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்துடன் கையாண்டு வருகிறோம்,” என்று பழனிவேல் மேலும் தெரிவித்துள்ளார்.