ஜாகர்த்தா, ஜனவரி 6 – கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் பின்பகுதியை (வால் பகுதி) இந்தோனேசிய கடற்படை ரோந்து கப்பல் ஒன்று கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானத்தின் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் தான், கறுப்புப் பெட்டியின் குரல் பதிவு மற்றும் விமானத்தின் தகவல் பதிவு அமைப்புகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ரோந்து கப்பலின் மாலுமி யயன் சோபியான் கூறியதாவது:- “கண்டுபிடிக்கப்பட்ட பொருள் விமானத்தின் பின்பகுதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது”.
எனினும், இது விமானத்தின் பின் பகுதி தானா என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இந்தோனேசிய அதிகாரிகளும் இதே கருத்தினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“கண்டுபிடிக்கப்பட்ட பொருள் விமானத்தின் பின்பகுதியா என்பது தற்சமயம் உறுதி படுத்த முடியாது. எனினும், நாங்கள் அதனை உறுதி படுத்த தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆழ்கடல் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் கருப்புப் பெட்டியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, விமானத்தின் கருப்புப் பெட்டி குறித்த நேர்மறையான தகவல்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.