லண்டன், ஜனவரி 6 – இங்கிலாந்தின் சௌத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல், ஐசில் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்த சரக்கு கப்பலில் ஜாக்குவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட 1400-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை சௌத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஹோ ஒசாகா கப்பல், ஐசில் தீவிற்கருகே வந்தபோது திடீரென தரைதட்டி நின்றது.
1400-க்கும் மேற்பட்ட கார்கள், 80 கட்டுமான பாகங்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், கிரேன்கள், கிரஷர் இயந்திரங்கள் உள்ளிட்ட 4600 டன்களுக்கும் அதிகமான இயந்திரங்கள் ஏற்றப்பட்டிருந்ததால், அந்த கப்பல் 52 டிகிரி கோணத்தில் ஒரே புறமாக சரிந்து விபத்துக்குள்ளாகி நிற்பதாக கூறப்படுகின்றது.
பல பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் அந்தக் கப்பலில் இருப்பதால், அதனை பாதுகாப்பாக மீட்க பல்வேறு மீட்புக் குழுவினர் ஐசில் தீவிற்கு வரவழக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும், கப்பலை நிமிரச் செய்ய பல நாட்களாகும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கப்பல் மாலுமி ஜான் நோபல் கூறுகையில், “கப்பல் சரியத் தொடங்கியவுடன் மீட்புக் குழுவினர் வந்து 25 பணியாளர்களையும் மீட்டனர். எனினும், கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது”.
“மேலும், கப்பலில் 500 டன்கள் எடையுள்ள எரிபொருள் இருப்பதும் சற்றே கவலை அளிப்பதாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார். கப்பல் சேதமடைந்ததன் காரணமாக பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வாகனங்களும் சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.