Home அவசியம் படிக்க வேண்டியவை 1-எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா நியமனம்! – ஆச்சரிய அலைகள்!

1-எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா நியமனம்! – ஆச்சரிய அலைகள்!

783
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 7 – 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1Malaysia Development Bhd (1MDB)  எனப்படும் அரசு முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா கந்தசாமி என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளது வணிக உலகில் ஆச்சரிய அலைகளைப் பரப்பியுள்ளது.

Arun Kanda CEO - 1MDB
அருள் கந்தா கந்தசாமி

இருப்பினும், அண்மையக் காலங்களில் பல கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ள 1எம்டிபி நிறுவனத்திற்கு முதன் முறையாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவது, அத்தகைய சர்ச்சைகளை திசை திருப்பும் ஒரு வணிக வியூகமா என்ற கேள்வியும் வணிக வட்டாரங்களில் எழுந்துள்ளது.

பிரதமர் நஜிப்பின் சிந்தனையில் உருவான அரசு சார்பு முதலீட்டு நிறுவனம் 1எம்டிபி. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து அம்னோ அரசியல் வட்டாரங்களிலும், அரசாங்க வட்டாரங்களிலும் பல சர்ச்சைகளை தொடக்க காலம் முதலே ஏற்படுத்தி வந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவதாக நியமிக்கப்படும் தலைமைச் செயல் அதிகாரி அருள் கந்தா ஆவார். ஆகஸ்ட் 2012இல் இந்தப் பதவிக்கு வந்த முகமட் ஹாசம் அப்துல் ரஹ்மான் தற்போது பதவி விலகிச் செல்வதால் அவருக்குப் பதிலாக அருள் கந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அருள் கந்தா – துபாய் வங்கியாளர்

மலேசியரான அருள் கந்தா துபாய் நாட்டில் வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராவார்.

1எம்டிபி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், இயக்குநராகவும் அருள் கந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசு சார்பு நிறுவனங்களில் தகுதிவாய்ந்த மலாய்க்காரர் அல்லாதார் நியமிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும்.

இந்நிலையில் பிரதமரின் செல்லக் குழந்தையாகக் கருதப்படும் 1எம்டிபி நிறுவனத்தில் இந்தியர் ஒருவர் முதல் நிலை பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது அரசாங்க கொள்கைகளின் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகின்றது.

இதற்கு முன் அரசு நிறுவனங்களில் இத்தகைய ஓர் உயர் பதவிக்கு இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

“இந்த முக்கியமான காலகட்டத்தில் 1எம்டிபி நிறுவனத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றேன். நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் எனது முதல் சவால், நிறுவனத்தின் நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்வதும், நிறுவனத்தின் சொத்துக்களிலிருந்து அதிகமான மதிப்பைப் பெற முயற்சி செய்வதும் ஆகும். இந்தப் பயணத்தில் மற்ற நிறுவனப் பொறுப்பாளர்களுடன் இணைந்து நான் நிறுவனத்திற்கும் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சிறந்த பயன்களையும் அதிகபட்ச இலாபத்தையும் கொண்டு வர பாடுபடுவேன்” என்று தனது நியமனம் குறித்து அருள் கந்தா கருத்துரைத்துள்ளார்.

அருள் கந்தா – சிறந்த அனுபவசாலி

38 வயதான அருள் கந்தா, இலண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ் என்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின், நிறுவன மற்றும் வணிக சட்டங்களுக்கான துறையின் பட்டதாரியாவார். பல அனைத்துலக முதலீட்டு வங்கிகளில் பணியாற்றிய பின்னர் 2009இல் ஆர்எச்பி கேப்பிட்டல் பெர்ஹாட் எனப்படும் உள்நாட்டு வங்கி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தின் பங்குதாரரான அபுதாபி கமர்ஷியல் வங்கியின் சார்பாக அருள் கந்தா இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அரசு நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற இந்திய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது.

இதுபோன்று ஓரிரு பதவிகள் என்று மட்டும் இல்லாது, பலதரப்பட்ட பணிகளிலும் இந்தியர்களும், சீனர்களும், மலாய்க்காரர் அல்லாதவர்களும் நியமிக்கப்படுவது, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால்தான் “ஒரே மலேசியா” என்ற தாரக மந்திரம் உண்மையிலேயே மக்கள் மத்தியில் எடுபடும் என்பதோடு,

மலாய்க்காரர் அல்லாதாருக்கும், தங்களுக்கும் இந்நாட்டில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது, தங்களுக்கும் இந்த நாட்டில் உரிமையும், ஈடுபாடும் இருக்கிறது என்ற சிந்தனையையும் மக்களிடையே தோற்றுவிக்கும்.

-இரா.முத்தரசன்