ஜம்மு, ஜனவரி 7 – ஜம்மு காஷ்மீரின் எல்லையில் உள்ள சம்பா, கதுவா மாவட்டங்களில் உள்ள 70 கிராமங்கள் மீது, சிறிய ரக பீரங்கி குண்டுகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை கிராமங்களில் இருந்து இது வரை 10 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 31-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. புத்தாண்டு தினத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உட்பட 2 பேர் பலியாயினர், 9 பேர் காயம் அடைந்தனர்.
இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலியாயினர். பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் 2 பேரும், பெண் ஒருவரும் பலியாயினர், 11 பேர் காயம் அடைந்தனர். 5-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர்.
சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள், 40 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் குண்டு வீசி வருகிறது. இதனால் எல்லை கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
கத்துவா மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டதால், எல்லை கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இவர்களில் 7 ஆயிரத்து 500 பேர் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.