டெல்லி, ஜனவரி 8 – முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. சுனந்தாவின் சில உடல் பாகங்களை சோதனை செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி டெல்லி நட்சத்திர விடுதியொன்றில், சுனந்தா புஷ்கர் சடலமாக மீட்கப்பட்டார். சுனந்தா தற்கொலை செய்துகொண்டதாக அப்போது கூறப்பட்ட போதிலும், அவரது மரணத்தில் சர்ச்சை நீடித்து வந்தது.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சுனந்தாவின் மரண வழக்கை டெல்லி காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (52) மரண வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் நேற்று புதிய வழக்கு பதிவு செய்தனர்.
விஷஊசி மூலமாகவோ, உணவில் விஷம் கலந்தோ அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக சுனந்தாவுக்கு நெருக்கமானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸி, “சுனந்தா புஷ்கர் வழக்கு விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது”.
“சுனந்தா புஷ்கர் உடலில் விஷம் இருந்தது தெரியவந்துள்ளது. விஷஊசி மூலமாகவோ, உணவில் விஷம் கலந்தோ அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததே கொலை வழக்கு பதிவு செய்ய ஆதாரமாக இருந்தது”.
“மேலும், சுனந்தா உடலில் ஊசி போடப்பட்டதற்கான தடயம் இருந்தது வழக்கில் மேலும் வலு சேர்த்துள்ளது. தேவைப்பட்டால் சுனந்தாவின் கணவர் சசி தரூரிடம் விசாரணை மேற்கொள்வோம்” என அவர் தெரிவித்தார். மேலும், சுனந்தாவின் சில உடல் பாகங்களை சோதனை செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.