Home 13வது பொதுத் தேர்தல் மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மீது ஹிண்ட்ராப் பலத்த அதிருப்தி-வேதமூர்த்தி அறிக்கை

மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மீது ஹிண்ட்ராப் பலத்த அதிருப்தி-வேதமூர்த்தி அறிக்கை

968
0
SHARE
Ad

Waythamoorthy---Feature-2

 

 

#TamilSchoolmychoice

 

 

 

 

 

பிப்ரவரி 28 – பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை குறித்து தனது பலத்த அதிருப்தியை வெளியிட்டுள்ள ஹிண்ட்ராப் இயக்கம், இந்திய சமுதாயத்தின் நலன்களை மக்கள் கூட்டணி புறக்கணித்துள்ளதாக குறை கூறியுள்ளது.

மலேசிய இந்தியர்களை தவிர்த்து மற்ற அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பிடத் தக்க கவனத்தை செலுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட மக்கள் கூட்டணியின் தேர்தல்  கொள்கை அறிக்கை குறித்து ஏமாற்றம் அடைவதாக ஹிண்ட்ராப் தெரிவித்துள்ளது.

“இந்நாட்டின் பிற சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் எதிபார்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் கூட்டணியின் (பக்காத்தானின்) தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதை தெளிவாக உணர முடிகிறது. ஆனால்  இந்தியர்களின் உரிமை குறித்தோ , எதிர்பார்ப்பு குறித்தோ கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல், 55 ஆண்டுகளாக தொடர்ந்து வஞ்சிக்கப்படும் இந்தியர்களை   மேலும் ஓரங்கட்டும் விதமாக எதிர்க்கட்சிகள் நடந்துகொள்வது விந்தையாக இருக்கிறது” என்று ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

இந்தியர்களை ஒதுக்கவில்லை என்று அன்வார் அறிவிப்பு…..

ஒரு பேட்டியின் போது  முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அன்வார் இப்ராஹிம் “பக்காத்தான் ராக்யாட் தேர்தல் அறிக்கை இனங்களுக்கு  அப்பாற்பட்டது  என்றும் அது இந்தியர்கள் உட்பட எந்த பிரிவினரையும்  ஒதுக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

அவர் கூறுவது உண்மை என்றால் மலாய்காரர்களுக்கும் , சீனர்களுக்கும் ,பூர்வீக சமூகத்தினருக்கும்,சபா சரவாக் மக்களுக்கும், முன்னாள் இராணுவ வீரர்களுக்கும், பெல்டா (FELDA)  திட்டத்தில் பலனடைந்தவர்களுக்கும் பிரத்தியேக திட்டங்களை முன்வைத்திருப்பதை அவர் எப்படி நியாயப்படுத்துகிறார்? இவ்வளவு பேருக்கும் குறிப்பிட்டு திட்டங்கள் வகுத்த பக்காத்தான் தலைவர்களின்  கண்களுக்கும், அறிவிற்கும் இந்தியர்கள் மட்டும் தென்படாமல் போனது எப்படி? “ என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“இன ரீதியான மார்க்கத்தில் இருந்து பக்காத்தான் விலகி செல்வதாக கூறப்படும் நொண்டி சமாதானங்களை நம்பி , குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மதத்தவருக்கும் மட்டும் திட்டங்களை வகுத்து  செயல்படுத்தும் அநீதியை   இந்திய வாக்காளர்கள் இனியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள வேதமூர்த்தி, “ஹிண்ட்ராப் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. 56 ஆண்டுகளாக வஞ்சிக்கப்ட்டு இனரீதியான அநீதிகளுக்கு பலியாகி தவிக்கும் சுமார் 15 லட்சம் ஏழை இந்தியர்களின்  சமூக  பொருளாதார நிலையை உயர்த்தி,  அவர்களை தேசிய முன்னேற்ற நீரோட்டத்தில் இணைப்பது என்ற  ஹிண்ட்ராப் அமைப்பின் போராட்டம் என்றுமே தடம் மாறாது” என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

“Centre for  Policy  Studies (கொள்கை ஆய்வுகளுக்கான மையம்) என்ற சுயேட்சையான அமைப்பு 2000 ஆண்டுவரை 6 இலட்சம் தோட்ட பாட்டாளிகள் தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாய குடி பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக  அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அரசின் மேம்பாட்டு திட்டங்களின் நேரடி பாதிப்பால் நிகழ்ந்ததுதான் இந்த கட்டாய குடி பெயர்வு. இந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல் இவ்வளவு  நாட்களாக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இந்த அநீதிக்கு தீர்வு காண முற்படாமல் பிரச்சனையை மீண்டும் மூடி மறைத்திருகிறது  பக்கத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கை” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

“பிறப்பு பத்திரம், அடையாள அட்டை போன்ற முறையான ஆவணங்கள் இல்லாமல் அவதியுறும் 350,000 இந்தியர்களின் அவலத்தை 5 ஆண்டுகளுக்கு முன்னரே ஹிண்ட்ராப் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தப் பிரச்சனையை சில மாதங்களுக்கு முன்னர்தான் கையில் எடுத்த பாக்கத்தான் கட்சிகள் புத்ரா  ஜெயாவை கைப்பற்றினால் இந்தப் பிரச்சனையைஉடனே தீர்ப்போம் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால் எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஒரே ஒரு  சொல் கூட இல்லை” என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

ஹிண்ட்ராப்-பக்காத்தான் தலைவர்கள் சந்திப்பு….

“மூன்று பக்காத்தான் தலைவர்களுடனான ஹிண்ட்ராப் சந்திப்பின் போதும் குறிப்பாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்த போதும் மலேசிய இந்தியர்களுக்கு பிரத்தியேக பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அதற்கான தீர்வாக ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்ட வரைவை முன்வைத்தோம் .  நில குடியமர்வு திட்டங்கள், வியாபார கடன் வசதிகள்,பெர்மிட்டுகள், கல்வி வாய்ப்புகள் போன்ற அம்சங்கள் அந்த திட்டத்தில் வகுக்கப் பட்டிருந்தன.”

“இந்த திட்டங்களை அமல்படுத்த நமக்கு ஆண்டு வரவு செலவு திட்டத்திலிருந்து 4.5 பில்லியன் அதாவது வெறும் 1.8 விழுக்காட்டை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் கேட்டிருந்தது. இந்த தொகை மனித மூலதனமாக கருதப் பட வேண்டும்.இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையிலும் , நாட்டின் வளர்ச்சியிலும் நாம் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும். ஹிண்ட்ராப் திட்டங்கள் முழுமையான , எளிதில் அமல் படுத்தக் கூடிய ,நிரந்தர தீர்வுகளுக்கு  வழி வகுக்கும் திட்டங்களாகும். இந்த திட்டங்களை   கொள்கை அளவில் சம்மதிப்பதாக பல உயர்நிலை சந்திப்புகளின் போது  பக்காதான் தலைவர்கள் பல முறை சொல்லி இருக்கிறார்கள்.”

“ஹிண்ட்ராப் முன்வைத்திருக்கும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை பக்கத்தான் கூட்டணி ஏற்று  முறைப்படி எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்து இந்தியர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அவர்களுக்கு இருக்கும் தீவிரத்தையும் ஆர்வத்தையும்  மெய்ப்பிக்க வேண்டும்” என்றும் ஹிண்ட்ராப் சார்பாக அதன் தலைவர் வேதமூர்த்தி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.