பிப்ரவரி 27 – மலேசிய பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள மலிவு விலை விமானப் பயண கட்டண நிறுவனமாக ஏர் ஆசியாவின் பங்குகளின் விலை இன்று ஏறத்தாழ 10 சதவீதம் ஒரே நாளில் உயர்ந்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மிக அதிகமான விலை உயர்வு இதுவாகும்.
இந்த ஆண்டு முதல் தங்களின் நிறுவனம் இலாப ஈவுகளை வழங்கும் என ஏர் ஆசியா வெளியிட்ட அறிவிப்பால்தான் அதன் பங்கு விலைகள் உயர்ந்தன.
ஏர் ஆசியா பங்குகள் ரிங்கிட் 2.94 வரை இன்று விலை உயர்வு கண்டன.
இந்த ஆண்டு முதல் தனது இலாபத்தில் 20 சதவீதத்தை இலாப ஈவாக வழங்கப்போவதாக ஏர் ஆசியா அறிவித்திருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு ஏர் ஆசியா 858.23 மில்லியன் ரிங்கிட்டை நிகர வருமான இலாபமாகப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாய்லாந்து நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் ஏர் ஆசியா மேலும் 1.16 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டி, கடந்த ஆண்டின் மொத்த இலாபமாக 1.88 பில்லியன் ரிங்கிட் இலாபத்தை ஈட்டியது.
இத்தகைய பெரும் அளவிலான இலாபத்தை நிறுவனம் கொண்டிருப்பதால், அதன் பங்குதாரர்கள் கணிசமான தொகையை இலாப ஈவாகப் பெற முடியும் என்ற காரணத்தால்தான் ஏர் ஆசியா நிறுவனப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மலேசியாவில் புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் மலிண்டோ மலிவுக் கட்டண விமான சேவையால் கடும் வாணிபப் போட்டியை ஏர் ஆசியா எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், டாட்டா நிறுவனத்துடன் ஏர் ஆசியா கூட்டு சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.