Home அவசியம் படிக்க வேண்டியவை “ஒளிப்பதிவாளராகத்தான் விரும்பினேன்” – சாதனையாளர் ஏற்புரையில் கமலஹாசன் சுவாரசியம்!

“ஒளிப்பதிவாளராகத்தான் விரும்பினேன்” – சாதனையாளர் ஏற்புரையில் கமலஹாசன் சுவாரசியம்!

1067
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 11 – நேற்று மாலை கோலாலம்பூரில் நடைபெற்ற ‘சீகா’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் விருது விழாவில், நடிகர் கமலஹாசனுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அந்த விருதை மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கமலுக்குப் பொன்னாடை போர்த்தி, வழங்கினார்.

Kamal 5
கமலுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம். அருகில் டத்தோ டி.மோகன். வலதுபுறத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா…

விருதை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் உரையாற்றும்போது முதலில் தான் இயக்குநராக வரவேண்டும் என மேற்கொண்ட முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டபோது, ஒளிப்பதிவுத் துறையில்தான் முதலில் ஈடுபட விரும்பியதாகவும், அந்த அளவுக்கு தனக்கு ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபாடு உண்டு என்ற சுவாரசியத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

“கடந்த காலங்களில் எனக்கு பல ஒளிப்பதிவாளர்கள் வாத்தியாராக இருந்திருக்கின்றார்கள். நான் நடித்த படங்களில் எல்லாம் ஒளிப்பதிவாளர்களை பல கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்திருக்கின்றேன். ஒரு ஒளிப்பதிவாளர், அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும் கேமராவைக் கழற்றி உள்ளே இருக்கும் பாகங்களைப் பற்றியெல்லாம் விளக்குவார்” என்றும் கமலஹாசன் கூறினார்.

Kamal 1
“சீகா” எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட “வாழ்நாள் சாதனையாளர்” விருதை அமைச்சர் டாக்டர் சுப்ரா கமலுக்கு வழங்குகின்றார்.

மொழி, மாநிலம் வித்தியாசம் இல்லாமல் அனைத்துக் கலைஞர்களையும் – தென்னிந்தியாவையே – ஒன்றிணைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் விருதுகள் விழாவையும் கமல் பாராட்டினார்.

ஒட்ட வெட்டிய முடியுடன், வெள்ளை சட்டையில், இரவு 9.00 மணிக்கு மேல் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த இரசிகர்களின் கைத்தட்டல்களுடன், அரங்கினுள் கம்பீரமாக நுழைந்த கமல், சுமார் இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது மொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

திரைப்பட ஒளிப்பதிவாளர்களும் ஏற்பாட்டாளர்களும் கமலுடன் குழுவாக எடுத்துக் கொண்ட நினைவுப் படம்
திரைப்பட ஒளிப்பதிவாளர்களும் ஏற்பாட்டாளர்களும் கமலுடன் குழுவாக எடுத்துக் கொண்ட நினைவுப் படம்

தனது ஏற்புரையில் கமலஹாசன் “இன்றைக்கு தமிழ்ப்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அன்றைக்கு முதன் முதலாக டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க ஒரு திரைப்படத்தை நான் எடுத்தேன். அந்த வகையில் ஒளிப்பதிவுத் துறையில் டிஜிட்டல் கேமராவைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததில், நான் முன்னோடியாக இருந்திருக்கின்றேன் என்பதற்காக நான் பெருமைப் படுகின்றேன்” என்றும் கூறினார்.

 

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)