கொழும்பு, ஜனவரி 13 – இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, 9,000 கோடி மதிப்பிலான கொழும்பு செயற்கை துறைமுகத் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சீனா நிதியுதவி வழங்கிய அனைத்து திட்டங்களிலும் அவர் சுய லாபம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இரண்டு முறை அதிபராக இருந்த ராஜபக்சே, சட்டங்களை மாற்றி மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட்டார்.
எனினும், அவரை சிறிசேனா தோற்கடித்து அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில், ராஜபக்சே ஊழல் குறித்து சிறிசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சீனாவுடன் போடப்பட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் கரைபடிந்துள்ளது.
குறிப்பாக சீனா, கொழும்புவில் 9000 கோடி செலவில் அமைக்க இருக்கும் செயற்கை துறைமுக உருவாக்கத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் சுய இலாபம் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், ராஜபக்சே ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டு வளர்ச்சிப் பணி திட்டங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றில் தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராஜபக்சே, அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதவியுடன் இராணுவ ஆட்சி அமைக்க முற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஊழல் புகார் காரணமாகவும் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.