Home இந்தியா ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி13-ல் இடைத்தேர்தல்!

ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி13-ல் இடைத்தேர்தல்!

467
0
SHARE
Ad

jaya6சென்னை, ஜனவரி 13 – ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், 16-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து, அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதும், அவர் வகித்து வந்த தமிழக முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவி ஆகிய இரண்டு பதவிகளும் தானாக ரத்தானது.

#TamilSchoolmychoice

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், ‘பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 27.9.2014 அன்று அளித்த தீர்ப்பினை தொடர்ந்து,

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயலலிதா வகித்து வந்த இடம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 27.9.2014 முதல் வெற்றிடமானதாக கருதப்படுகிறது என்று நீண்டநாட்களுக்கு பிறகு அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி சட்டப்பேரவை செயலாளர் அனுப்பி வைத்தார்.

தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடித்து தயார் நிலையில் வைத்திருந்தது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில், காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது”.

“இதையொட்டி வருகிற ஜனவரி 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27-ஆம் தேதி கடைசி நாள். ஜனவரி 28-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்”.

“ஜனவரி 30-ஆம் தேதி வேட்புமனுவை வாங்க கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.  இதையடுத்து பிப்ரவரி 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்”.

“16-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளது”.

“ஸ்ரீரங்கம் தொகுதி உள்பட தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளுக்கும் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார் தேர்தல் ஆணையர் சம்பத்.