பாரீஸ், ஜனவரி 13 – தாக்குதலுக்கு உள்ளான சார்லி ஹெப்டோ இந்த வார பதிப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூன்களை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பத்திரிக்கை ஆசிரியர், கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன்கள் வெளியிட்டதால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது. பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நபிகள் நாயகத்திற்காக பழிவாங்கிவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அந்த 2 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சார்லி ஹெப்டோவின் சிறப்பு பதிப்பு புதன்கிழமை வெளியாக உள்ளது.
இதில் நபிகள் நாயகத்தின் கார்டூன்கள் நிச்சயமாக இருக்கும் என்று சார்லி ஹெப்டோவின் வழக்கறிஞர் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் கார்டூன்களுடன் வெளியாக உள்ள பத்திரிக்கை வாசகர்களின் வசதிக்காக 16 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களை அடக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்ச மாட்டோம் என்பதை நிரூபிக்கவே மீண்டும் நபிகள் நாயகத்தின் கார்டூனை வெளியிடுகிறோம் என்று சார்லி ஹெப்டோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சார்லி ஹெப்டோ வாரத்திற்கு 60 ஆயிரம் பிரதிகள் அச்சடித்தால் அதில் பாதி தான் விற்பனையாகும். ஆனால் தற்போது அலுவலகம் தாக்கப்பட்டதால் உலக மக்களின் கவனத்தை சார்லி ஹெப்டோ ஈர்த்துள்ளது. இந்நிலையில் நாளை 10 லட்சம் பிரதிகள் வெளியாக உள்ளது.
தாக்குதல் நடந்த சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அதனால் ஊழியர்கள் லிபரேஷன் என்ற நாளிதழ் அலுவலகத்தில் பிற பத்திரிகை நிறுவனங்களின் கருவிகளை கடன் வாங்கி பணியற்றுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.