பெஷாவர், ஜனவரி 13 – பெஷாவரில் தாலிபான்கள் தாக்குதல் நடத்திய ராணுவ பள்ளி ஒரு மாதம் கழித்து இன்று திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த மாதம் 16-ஆம் தேதி புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140 குழந்தைகள் உள்பட 150 பேர் பலியாகினர்.
இதையடுத்து அந்த பள்ளி உள்பட பெஷாவர் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. சுமார் ஒரு மாதம் கழித்து ராணுவ பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் ஒருவித பயத்துடனும், கண்ணீருடனும் தான் வந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தாக்குதல் நடந்த பள்ளி மாணவர் ஷாருக்கான்(16) கூறுகையில்,
“என்னுடைய நண்பர்கள் 30 பேர் பலியாகிவிட்டனர். காலியாக உள்ள வகுப்பறையில் நான் எப்படி அமர்வேன். என் இதயம் நொறுங்கியுள்ளது. என் நண்பர்கள் இறந்துவிட்டனர். எனக்கு பள்ளிக்கு செல்லவே பிடிக்கவில்லை” என்றார்.
தீவிரவாதிகள் ஷாருக்கின் இரண்டு கால்களிலும் சுட்டனர். அவர் இறந்தது போன்று நடித்து உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.