பாரீஸ், ஜனவரி 14 – நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியாக உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை தொடர்ந்து நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன்கள் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர்.
நபிகள் நாயகத்திற்காக பழிவாங்கிவிட்டதாக அந்த தீவிரவாதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த கொடூரத் தாக்குதலுக்கு பிறகும் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூனை வெளியிட சார்லி ஹெப்டோ முடிவு செய்தது.
பத்திரிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியாகிறது. அதன் அட்டைப்படத்தில் நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற வாசகமும் உள்ளதாம்.
இந்த சிறப்பு பதிப்பில் தீவிரவாதத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை பாரீஸில் நடந்த மாபெரும் பேரணி பற்றிய புகைப்படங்களும் இருக்குமாம். அந்த பேரணியில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 16 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பதிப்பை முதலில் 10 லட்சம் பிரதிகள் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் தேவை அதிகமாக உள்ளதால் இன்று 30 லட்சம் பிரதிகளை வெளியிடுகிறார்கள். சிறப்பு பதிப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூன் இருப்பதற்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.