இஸ்லாமாபாத், ஜனவரி 14 – பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளியில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை அழிக்க நவாஸ் ஷெரீப் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கராச்சி, சுக்குர், பைசலாபாத் மற்றும் ராவல்பிண்டி சிறைச்சாலைகளில் பெஹ்ரம் கான், ஷாகித் ஹனீப், முகமது தல்ஹா, கலீல் அகமது, ஜுல்பிகர் அலி, முஷ்டாக் அகமது மற்றும் நவாசிஷ் அலி ஆகிய ஏழு பேரும் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2003-ஆம் ஆண்டு சிந்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் பெஹ்ரம் கானுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதே போல் 2001-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த முக்கிய அதிகாரியை கொன்ற வழக்கில் ஷாகித் ஹனீப், முகமது தல்ஹா, கலீல் அகமது ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜுல்பிகர் அலிக்கு, கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு போலீசாரை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் முஷ்டாக் அகமது மற்றும் நவாசிஷ் அலி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுவரை பாகிஸ்தான் அரசு 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிள்ளது குறிப்பிடத்தக்கது.