Home நாடு ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு மலேசியர் கைது

ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு மலேசியர் கைது

505
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 17- ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான அந்நபர் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தபோது, மலேசியாவின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

PDRM

மலேசியாவில் மட்டும்தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இயங்கி வருகின்றனர் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மலேசியாவுக்கு வெளியேயும் மலேசியர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக இயங்கி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அந்த ஆடவர், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்காக மலேசியர்களைத் தேர்வு செய்து, ஆஸ்திரேலியா வழியாக சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

“ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த 3 மாதங்களாக சட்டத்திற்கு விரோதமாக அவர் பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது,” என தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் அயோப் கான் மைடீன் தெரிவித்துள்ளார்.

விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் மலேசிய ஆடவர் ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபடி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் தீவிரவாத தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த சில மாதங்களாக பலரை மலேசிய காவல்துறை விசாரித்து வந்தது. எனவே போலீசாரிடம் சிக்காமல் இருக்கவே அந்த ஆடவர் ஆஸ்திரேலியா சென்று, அங்கிருந்தபடி ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளார்.

சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்காகப் போரிட, ஆஸ்திரேலியா வழி ஆட்களை அனுப்பி வைத்துள்ளார் அந்த ஆடவர் என்றும், இதுவரை 5 மலேசியர்கள் இவ்வாறு சிரியா சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அந்த ஆடவர் வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்ததும் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஆஸ்திரேலியாவில் வசித்த மலேசியத் தம்பதியர் இதே குற்றச்சாட்டின் பேரில் கடந்த 7ஆம் தேதி நாடு கடத்தப்பட்டதாகவும், கோலாலம்பூர் வந்தடைந்தபோது கைதாகியதாகவும் கூறப்படுகிறது.