ஜாகர்த்தா, ஜனவரி 16 – கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் நடுப்பகுதியை நெருங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக விமான பாகத்தை மீட்பதில் சிரமங்கள் நிலவுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விமான நடுப்பகுதியை நெருங்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று கடல் கொந்தளிப்பு காரணமாக ஆழ்கடல் பகுதியில் உள்ள பொருட்களை துல்லியமாகப் பார்ப்பதில் முக்குளிப்பு வீரர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 5 முக்குளிப்பு வீரர்கள் விமானத்தின் நடுப்பகுதிக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த முறை வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும் எனத் தாம் நம்புவதாக இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்துள்ளார்.
“இன்று வானிலை தெளிவாக உள்ளது. எனவே விமானத்தின் நடுப்பகுதியை முக்குளிப்பு வீரர்களால் நெருங்க முடியும் எனத் தோன்றுகிறது. விமானத்தின் அந்தப் பகுதி தற்போது எந்த நிலையில் உள்ளது, அதனுள்ளே பயணிகளின் உடல்கள் ஏதேனும் உள்ளதா? என வீரர்கள் முதலில் ஆய்வு செய்வர்,” என்றார் சுப்ரியாடி.
ஆழ்கடலில் உள்ள விமானத்தின் நடுப்பகுதியில் இருந்து பயணிகளின் உடல்களை மீட்பது சிரமமாக இருக்கும் எனில், விமானத்தின் அந்தப் பெரிய பாகத்தை மொத்தமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பலூன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தின் வால்பகுதி ஆழ்கடலில் இருந்து மீட்கப்பட்டது. அதேபோல் விமானத்தின் நடுப்பாகமும் மீட்கப்படும் எனத் தெரிகிறது.
“இதற்காக பலூன்களைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். அதேசமயம் மிகப்பெரிய பாகம் என்பதால் அதை மீட்பது அவ்வளவு சுலபமல்ல. மாறாக, அதற்குள் சிக்கியுள்ள பயணிகளின் உடல்களை ஒவ்வொன்றாக மீட்பது சுலபமாக இருக்குமெனக் கருதுகிறோம்,” என்றார் சுப்ரியாடி.