ஜகார்த்தா, ஜனவரி 22 – ஜாவா கடலில் ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் நடுப்பகுதி கிடக்கும் இடத்திற்கு அருகில், 5 பயணிகளின் சடலங்கள் இருப்பதை இந்தோனேசிய முக்குளிப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.பி. சுப்ரியாடி இன்று வெளியிட்டுள்ள தகவலில், “விமானத்தின் உடற்பகுதி இருக்கும் இடத்திலிருந்து 50 முதல் 100 மீட்டர் தொலைவில், 5 பயணிகளின் சடலங்கள் பாதுகாப்புப் பட்டை அணிந்த நிலையில் சேற்றில் புதைந்து இருப்பதை முக்குளிப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர். அநேகமாக அவர்களது சடலங்கள் விமானத்தில் இருந்து வெளியேறியிருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் மூன்று சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டன என்றும், எஞ்சியுள்ள இரண்டு சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் சுப்ரியாடி கூறியுள்ளார்.
மேலும், முக்குளிப்பாளர்கள் இன்னும் விமானத்தின் முக்கியப் பாகத்தை நெருங்கவில்லை என்றும், அதில் இன்னும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் சடலங்கள் இருக்கலாம் என்றும் சுப்ரியாடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி, 162 பயணிகளுடன் கடலில் நொறுங்கிய விமானத்தில் இருந்து இதுவரை 53 பயணிகளின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இன்று கண்டறியப்பட்ட 5 சடலங்களோடு சேர்த்து மொத்தம் 58 சடலங்கள் மட்டுமே தற்போது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.