நியூயார்க், ஜனவரி 26 – ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கூக்கின் அடிப்படை சம்பளம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், ஊழியர்களுக்கான ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூக்கின் அடிப்படை சம்பளம் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் அவரது மொத்த ஊதியம் 9.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. டிம் கூக் மட்டுமல்லாமல், மற்ற நிர்வாகிகளின் அடிப்படை ஊதியமும் 14 சதவீதம் அதிகரித்துள்ளது அந்த அறிக்கையின் மூலம் தெரிவருகிறது.
இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு ஆப்பிளின் தயாரிப்பான ஐபோன் 6 அடைந்த வர்த்தக வெற்றியாகும். இதுவரை சுமார் 40 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸின் இறப்பிற்கு பிறகு தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற டிம் கூக், ஆப்பிள் நிர்வாகத்தை வர்த்தக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக வழி நடத்தினார். கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் தடவையாக கூக்கின் அடிப்படை ஊதியம் உயர்வு பெற்றுள்ளது.
வர்த்தக வெற்றியை கொண்டாடும் வகையில், நிர்வாகிகளின் குழு செயல்பாடுகளுக்கு ஊக்கத் தொகையாக தனி நபர் ஊதியத்தில் 400 சதவீதத்தை ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஆப்பிள் நிறுவனத்தில் இணைய விற்பனை பிரிவின் மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா அஹ்ரேண்ட்ஸிற்கும், எதிர்பார்க்க முடியாத அளவில் ஊக்கத்தை தொகையாக 73 மில்லியன் டாலர்களை ஆப்பிள் வழங்கி உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸிற்கு கிடைத்த வரவேற்பே இந்த உயர்விற்கான காரணம்.
கடந்த ஆண்டு நிறுவனத்தை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வெற்றி பெறச் செய்த ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆப்பிள் இந்த சலுகைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.