இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சங்கங்களின் பதிவிலாகா பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களை வெளியிடுவோர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதை தாம் ஏற்கெனவே வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“எனினும் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. மஇகா நிர்வாகிகள், குறிப்பாக துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் ஒருவரும் கூட ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறி, தவறான தகவல்களை ஊடகங்களிடம் பரப்பி வருகிறார்கள். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சங்கங்களின் பதிவிலாகா அனுப்பிய கடிதம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து நிறைய வதந்திகள் உலா வருகின்றன. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் பரிந்துரைகள் மட்டுமே. ஆனால் ஒரு சிலர் தங்களுடைய தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து ஊடகங்களிடம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.” என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
சங்கப் பதிவிலாகா உத்தரவு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சங்கப்பதிவிலாகா உத்தரவு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு டிசம்பர் 24ஆம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“அதற்கு சங்கப் பதிவிலாகா கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பதிலளித்தது. மேலும் மஇகா நிர்வாகிகள் தேர்வு குறித்து முன் அறிவிப்பு கடிதமும் (நோட்டீசும்) அனுப்பியது. அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், அது சட்டப்படி தவறு என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உள்துறை அமைச்சிடம் முறையீடு செய்துள்ளோம்,” என்று பழனிவேல் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்துறை அமைச்சரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும், அதைப் பொறுத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.