வாஷிங்டன், ஜனவரி 26 – கனடாவைச் சேர்ந்த கேத்தி பீட்ஸ் என்ற 29 வயதுப் பெண், ‘ஸ்டார்கர்ட்’ (Stargardt) எனும் மரபணுக் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு தனது பார்வையை இழந்தார்.
இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான அவர் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை பார்ப்பதற்கு ஏங்கினார். அவரின் ஆசையை நிறைவேற்ற தீர்மானித்த அறிவியலாளர்கள்,
பிரத்யேக கண்ணாடி மூலம் அவர் தனது குழந்தையை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர். குழந்தை பிறந்த பிறகு, முதல் முறையாக தனது குழந்தையைப் பார்த்த கேத்தி எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்தார்.
கேத்தியின் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை காணொளியாக பதிவு செய்த அவரது உறவினர்கள், அதை ‘யூ-டியூப்’ (You Tube)-லும் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த காணொளியை இலட்சக்கணக்கான மக்கள் பார்த்து நெகிழ்கின்றனர்.
அந்த காணொளியில் ‘பார்வையை மேம்படுத்தும் கண்ணாடி’ (Vision Enhancing Glass)-யை அணிந்திருக்கும் கேத்தி தன் குழந்தையைப் பார்த்து அதிசயிப்பது பார்வையாளர்களை நெகிழச் செய்துள்ளது.
இது குறித்து கேத்தி கூறுகையில், “நான் பார்க்கும் முதல் குழந்தை எனது குழந்தைதான். இது என்னை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
தன் குழந்தையைப் பிரசவித்த மறு நொடியே கேத்தி தன் குழந்தையைப் பார்க்க விரும்பியதாக கேத்தியின் சகோதரி இவான் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
கேத்தியின் தாயன்பை கீழே உள்ள இணைப்பின் மூலம் காண்க:-