Home நாடு பழனிவேலுவின் கோட்டை சிலாங்கூர் மாநிலம் சுப்ரா பக்கம் சாய்ந்தது!

பழனிவேலுவின் கோட்டை சிலாங்கூர் மாநிலம் சுப்ரா பக்கம் சாய்ந்தது!

599
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 26 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைவராக இருக்கும் சிலாங்கூர் மாநில மஇகாவின் முக்கிய பொறுப்பாளர்களும், தொகுதித் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தொகுதித் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பழனிவேலுவின் ஆதரவு சரிந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

articless-subramaniam1-020713_600_398_100சிலாங்கூர் மாநிலம் எப்போதுமே பழனிவேலுவின் அரசியல் கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. நீண்ட காலமாக இந்த மாநிலத்தின் தலைவராக பழனிவேல் செயல்பட்டு வந்துள்ளார்.

மஇகாவின் கட்டமைப்பில் அதிகமான கிளைகள், பேராளர்களோடு மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சிலாங்கூரைத் தன் கைப்பிடிக்குள் இறுதிவரை வைத்திருந்த காரணத்தால்தான் முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவால் கட்சியையே தனக்கு ஆதரவாக இயக்க முடிந்தது என அரசியல் பார்வையாளர்கள் கூறுவார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், கடந்த சனிக்கிழமை சிலாங்கூரின் முக்கிய பொறுப்பாளர்களும், பாதிக்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது முக்கிய திருப்பமாக கருதப்படுகின்றது.

காரணம், எத்தகைய கூட்டத்தை நடத்துவதற்கும் துணைத் தலைவருக்கு நான் அதிகாரம் வழங்கவில்லை என பழனிவேல் அறிவிப்பு விடுத்தும், பழனிவேலுவுக்கு நெருக்கமான தலைவர்கள் பலர் ஒவ்வொரு தொகுதித் தலைவராக அழைத்து சுப்ராவின் கூட்டத்திற்குப் போகாதீர்கள் என நெருக்குதல்கள், மிரட்டல்கள் விடுத்தும்கூட, துணிந்து சிலாங்கூர் மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

சிலாங்கூர் பொறுப்பாளர்கள் மூவர் சுப்ரா பக்கம்

MIC-Logoசிலாங்கூர் மாநிலத்தின் செயலாளர் கே.ஆர்.பார்த்திபன், துணைச் செயலாளராக இருக்கும் டத்தோ எஸ்.எம்.முத்து, பொருளாளராக இருக்கும் என்.ரவிச்சந்திரன் (காஜாங் ரவி) ஆகிய மூன்று பொறுப்பாளர்களுமே சுப்ரா பக்கம் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

பார்த்திபன் தஞ்சோங் காராங் தொகுதியைத் தனது பொறுப்பில் வைத்திருப்பவர். முத்து கிளானா ஜெயா தொகுதியின் தலைவர். ரவிச்சந்திரனோ செர்டாங் தொகுதியின் தலைவர்.

இதில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் ரவிச்சந்திரனின் முடிவுதான். நீண்ட காலமாக பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரவிச்சந்திரன், 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் பழனிவேலுவின் ஆசிபெற்ற அணியில் மத்திய செயலவைக்குப் போட்டியிட்டார். இருப்பினும் தோல்வி கண்டார்.

கடந்த 13வது பொதுத் தேர்தலிலும் அவர் சிலாங்கூரின் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட பழனிவேல் வாய்ப்பளித்தார்.

மனம் மாறிய தொகுதித் தலைவர்கள்

g-palanivel_mic-300x198சிலாங்கூரின் மூன்று முக்கியப் பொறுப்பாளர்கள் சுப்ரா பக்கம் சாய்ந்தது ஒருபுறமிருக்க, பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட சில தொகுதித் தலைவர்களும் சனிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்டு மஇகா வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கோலாசிலாங்கூர் தலைவர் ஜீவா, அம்பாங் தலைவர் வில்சன், ஷா ஆலாம் தலைவர் முருகவேல், உலு லங்காட் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன், கோல லங்காட் தலைவர் பத்துமலை, பூச்சோங் தலைவரும் முன்னாள் தலைமைச் செயலாளருமான சக்திவேல் – என ஒரு காலத்தில் பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் சுப்ரா பக்கம் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

இவர்களைத் தவிர ஏற்கனவே சுப்ராவுக்கு ஆதரவாக இருந்து வரும் கிள்ளான் தொகுதி தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், சபாக் பெர்ணம் தொகுதி தலைவர் சந்திரபிரகாசம் ஆகியோரும் கலந்து கொண்டு சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள மொத்தம் 22 தொகுதிகளில் 12 தொகுதிகள் சுப்ராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துணிச்சலுடன் எடுத்துள்ளன.

கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்ற தொகுதிகளிலும் கூட அந்தத் தொகுதிகளில் உள்ள பல கிளைத் தலைவர்களும், பேராளர்களும் பிளவுபட்டு நிற்கின்றனர் என்றும், அவர்களில் பலர் சுப்ராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய தேசிய நிலைத் தலைவர்களும் சுப்ராவுக்கு ஆதரவு

P-Kamalanathanஇவர்களைத் தவிர இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜா, மகளிர் தலைவி மோகனா முனியாண்டி, புத்ரி தலைவி குணமலர் ஆகியோரும் தொகுதித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை சுப்ராவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

ஏற்கனவே, சரவணன், கமலநாதன் (படம்) என இரண்டு துணையமைச்சர்களும் சுப்ரா பக்கம்தான். மஇகாவில் தற்போது இருக்கும் 5 செனட்டர்களில் மூவர் – ஜஸ்பால் சிங், விக்னேஸ்வரன், பகாங் தலைவர் குணசேகரன் – ஆகியோரும் சுப்ராவுக்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

இத்தனை முக்கிய தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதன் மூலமும், குறிப்பாக பழனிவேலுவின் கோட்டையாக கருதப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதன் மூலமும் சனிக்கிழமை சுப்ரா வழிநடத்திய சந்திப்பு கூட்டம் அவருக்கு அரசியல் ரீதியில் மாபெரும் வெற்றி எனக் கருதப்படுகின்றது.

தேசியத் தலைவரின் எதிர்ப்பையும் மீறி கூட்டத்தை நடத்தியது, இத்தனை தலைவர்களையும் ஒருங்கே ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்தது, போன்ற செயல் நடவடிக்கைகளின் வழி, பழனிவேலுவுக்கு எதிராக ஒரு சரியான மாற்றுத் தலைமையை வழங்குவதற்கு நான் தயார் என அறைகூவல் விட்டு முன்வந்திருக்கின்றார் சுப்ரா.