பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 26 – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ‘சைபர் கேலிபேட்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பல் ஒன்று இன்று காலை தன்வசப்படுத்தி (Hack) உள்ளது.
அதுமட்டுமின்றி இணையதளத்தின் முகப்பில் மாஸ் ஏ380 விமானத்தின் படத்தை வெளியிட்டு, அதில் “404 – Plane Not Found” என்ற வாசகத்தையும் பதிவு செய்துள்ளது.
மேலும், ‘Lizard Squad’, ‘UGNazi’, ‘NATHAN NYE’ and ‘HENRY BLAIR STRATER’ போன்ற டிவிட்டர் கணக்குகளின் மூலம் தங்களது நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சதி வேலைக்குப் பின்னணியில் ஈராக், சிரியா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கும்பல் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
காரணம், ‘ISIS will prevail’ என்ற வாசகமும் அந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘Lizard Squad’ என்ற கும்பல் ஏற்கனவே சோனி நிறுவனத்தின் இணையதளம், மைக்ரோசாஃப்ட் இணையதளம் போன்றவற்றை கடந்த வருடம் தன்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மாஸ் நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிடும் வாடிக்கையாளர்களை தங்கள் வசப்படுத்தி டிவிட்டர் பக்கத்தில் இணைப்பதற்காக இந்த சதி வேலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.