Home நாடு தைப்பூசம்: பினாங்கில் தேங்காய் தட்டுப்பாடு: விலை அதிகரிப்பு

தைப்பூசம்: பினாங்கில் தேங்காய் தட்டுப்பாடு: விலை அதிகரிப்பு

943
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன், ஜனவரி 27 – தைப்பூசத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பினாங்கில் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேங்காய் வினியோகம் குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

பினாங்கிலுள்ள ஒரு மொத்த விற்பனையாளர் கூறுகையில், பேராக் மாநிலத்தின் சித்தியவான் மற்றும் கோலபெர்னாம் பகுதிகளில் இருந்து கடந்தாண்டை விட தற்போது குறைந்தளவு தேங்காய்களே வந்துள்ளன  என்றார்.

தற்போது பேராக்கில் நீடித்து வரும் கனமழை காரணமாக குறைந்தளவு தேங்காய்களே உற்பத்தியாகி உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

#TamilSchoolmychoice

Coconuts-

“சித்தியவானில் இருந்து போதுமான அளவு தேங்காய் வரத்து இல்லாததால் கிளந்தானிலிருந்து வாங்க முடிவு செய்தோம். எனினும் அம்மாநிலத்தில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக தேங்காய்கள் உரிய நேரத்தில் வரவில்லை. மேலும் கடந்த தைப்பூசத்திற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் தேங்காய்களை விநியோகித்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரம் தேங்காய்களை மட்டுமே விநியோகிக்க முடிந்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சம் தேங்காய்களுக்கு ஆர்டர் கிடைக்கும்,” என விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

தேங்காய் வரத்து குறைந்தாலும் கூட வெ.1.60 என்ற பழைய விலைக்கே அவற்றை விற்று வருவதாகக் குறிப்பிடும் அவர்கள், தேங்காய்கள் தரமாக இருக்காது எனும் அச்சம் காரணமாக அண்டை நாடுகளிலிருந்து அவற்றை வாங்குவதில்லை என்கிறார்.

சில பகுதிகளில் தற்போது ஒரு தேங்காய் வெ.1.90 முதல் வெ.2 வரை விற்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தேங்காய் விலை வெ.2.50ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி சுப்பாராவ் கூறுகையில், “தேங்காய்களின் விலை உயராத வகையில் உள்நாட்டு தொழில், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளார்.

பினாங்கு மாநிலத்தில் தைப்பூசத்தின்போது  ரத ஊர்வலத்தில், இந்துக்கள் மட்டுமின்றி சீனர்களும் ஆயிரக்கணக்கான தேங்காய்களை வேண்டுதலுக்காக உடைப்பது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும்.

மற்ற தைப்பூசத் திருத்தலங்களிலும் இதுபோன்றே ஆயிரக்கணக்கான தேங்காய்கள் வேண்டுதலுக்காக உடைக்கப்படுகின்றன.