நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்நாட்டு கிராமப்பகுதிகளில் புகுந்து பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
நைஜீரியாவை இஸ்லாமிய தேசமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான மைதுகுரியை தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்கினர்.
அதை தொடர்ந்து அந்நாட்டு இராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. நைஜீரிய இராணுவத்தின் போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
அடுத்த மாதம் நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சுமூகமான முறையில் நடத்தவும், போக்கோ ஹரமை முற்றிலும் ஒழிக்கவும் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்காக நைஜீரிய இராணுவத்திற்கு அதி நவீன ஆயுதங்களும், போர் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நைஜீரியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.