Home படிக்க வேண்டும் 2 “கற்றல் குறைபாட்டின் (டிஸ்லெக்சியா) விளைவுகளும், தீர்வும்” – டாக்டர் முல்லை ராமையா ஆய்வு (பாகம் 2)

“கற்றல் குறைபாட்டின் (டிஸ்லெக்சியா) விளைவுகளும், தீர்வும்” – டாக்டர் முல்லை ராமையா ஆய்வு (பாகம் 2)

1809
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 30 – (“டிஸ்லெக்சியா” எனப்படும் உடல் நலக் குறைபாடு குறித்து நீண்ட காலமாக ஆய்வில் ஈடுபட்டு வரும் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான டாக்டர் முல்லை ராமையா (படம்) இந்த குறைபாடு குறித்து மாணவர்களிடையே விரிவான சோதனைகளை நடத்தியிருப்பதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தேவையான பயற்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

mullai ramaiyah Dr

இது குறித்த அவரது ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றை வாசகர்களின் பயன்பாட்டிற்காக இங்கே வழங்குகின்றோம். இது இரண்டாவது பாகம். இந்தக் கட்டுரையின் முதல் பாகம் நேற்று செல்லியலில் ‘வாழ்நலம்’ பிரிவில்  இடம் பெற்றது)

#TamilSchoolmychoice

என்னிடம் உதவிக்கு வரும் டிஸ்லெக்சியா உடைய தமிழ்ப் பள்ளி மாணவர்களைக் கொண்டும், பல தமிழ் ஆசிரியர்களுடனான உரையாடல்களின் வழியும் நான் அறிந்தவை:

  1. குறை என்னவென்று அறியாமலேயே குறை நீக்கல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன;
  2. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரை, எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே அடைவு நிலையில் மாணவர்கள் உள்ளார்கள்;
  3. மலாய் மொழிக்கு உள்ளது போல் ஒற்றைக்கு ஒற்றை பிரத்தியேக குறைநீக்கல் ஆசிரியர், தமிழ் மொழிக்கு இல்லை;
  4. தமிழ், மலாய், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளைக் கற்கவேண்டிய பிள்ளைகள் எந்த மொழியையும் சரிவர கற்றுக் கொள்ளவில்லை.
  5. கணிதத்திலும் மிகப் பின்தங்கி உள்ளனர்.

என்னிடம் வரும் இப்பிளைகளைப்போல் எத்தனை எத்தனை பிள்ளைகள் நம் தமிழ்ப் பள்ளிகளில் (CHILD ஆய்வின் படி  பார்த்தாலும்) இருக்கவேண்டும்! இந்த நிலை மாறவேண்டும்!

Dyslexia-picமுதலில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் பின்தங்கிய மாணவர்களின் குறை என்னவென்று அறிய வேண்டும். ஏன் இவ்வளவு சூடிகையாகப் பேசும் பிள்ளைகளால் பாடங்களில்  தேறமுடியவில்லை என்று சிந்திக்கவேண்டும். ஏன் இந்தப் பிள்ளை ஓர் இடத்தில் அமரமுடியாமல் நிலைகொள்ளாமல் தவிக்கிறது என்று ஆராய வேண்டும். அறிவுபூர்வமாகப் பேசும் இந்தப் பிள்ளை ஏன் வெண்பலகையைக் கண் கொண்டு பார்க்க மாட்டேன் என்கிறது என்று யோசிக்கவேண்டும். ஏன் இந்தப் பிள்ளை இவ்வளவு பிழையாக எழுதுகிறாள் என்று அவள் எழுத்தை ஆராயவேண்டும். பள்ளியின் சிறந்த ஓட்டக்காரனான இவனால் ஏன் ஒரு வாக்கியத்தைக் கூட ஆறாம் வகுப்பில் வாசிக்க முடியவில்லை என்று மிகத் தீர்க்கமாகச் சிந்திக்கவேண்டும்.

சராசரி மாணவர்களுக்குப் பயன் படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையைக் குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பித்தலால் சிறிதும் பயன் பெறமுடியாது.

டிஸ்லெக்சியா நிச்சயமாக ஒரு நோயல்ல

Dyslexia Student Maleடிஸ்லெக்சியாவினால் பாதிக்கப் பட்டிருக்கும் பிள்ளைகளால் எழுத்துருவில் அல்லது வரைபொழிவில் இருக்கும் வடிவங்களைக் கிரகிக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நிச்சயமாக ஒரு நோயல்ல.

பெரும்பாலும் இப்பிள்ளைகள் அறிவுக் கூர்மையுடன் இருப்பார்கள். வெளியில் பார்த்தால் சராசரிப் பிள்ளைகளைப் போலவே இருப்பார்கள். நன்கு பேசுவார்கள், விளையாடுவார்கள்.

டிஸ்லெக்சியாவுக்கும் பகுத்தறியும் திறனுக்கும் சம்பந்தம் இல்லை. கண்ணும் காதும் சரியாக இயங்கியும், சராசரிக்கும் மேல் அறிவு இருந்தும் வாசிக்கவும் எழுதவும் முடியாமல் போகும் சோகத்திற்குப் பெயர்தான் டிஸ்லெக்சியா!

நம் பிள்ளைக்கு எக்குறையும் இல்லை, காலப்போக்கில் படித்துக்கொள்வான்/வாள் என்று இக்குறை இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் பெற்றோர்கள் பலர் உண்டு. இது, அவர்களே தங்கள் பிள்ளையின் குறையைப் அதிகமாக்குவதற்குச் சமம்!

எவ்வளவு விரைவில் இப் பிள்ளைகள் உதவி பெறுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் முன்னேற்றம் இருக்கும். வயதாக ஆகப் பிள்ளையின் கிரகிக்கும் திறன் குறைந்துகொண்டு போவதோடு ஏற்கனவே மூளையில் பதிந்த தவறான புரிதல்களை எதிர்கொண்டு அவற்றை மாற்றி கொள்வதுங்கூடச் சிரமமாகிவிடும். இந்தப் போராட்டத்தில், கொஞ்சநஞ்சம் இருக்கும் தன்னம்பிக்கையும் அற்றுப் போய்விடும்.

டிஸ்லெக்சியாவுக்கான அறிகுறிகள்:

  • எழுத்துகளை வாசிப்பதற்குச் சிரமப்படுதல்
  • எழுத்துக் கூட்டி வாசிப்பதற்குச் சிரமப்படுதல்
  • எழுத்துகளை நிலைநிறுத்த முடியாமை (அவர்கள் கண்களுக்கு அவை மிதப்பது போலவோ, கலங்கி இடம் மாறுவது போலவோ தோன்றும்)
  • வாசிக்கும்போது, சில வார்த்தைகளை விட்டுவிடுதல் அல்லது இல்லாத வார்த்தைகளைச் சேர்த்து வாசித்தல்
  • தெரிந்த சொற்களை மறந்துவிடுவது
  • எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுதல்
  • எழுத்து கோணல்மாணலாக இருப்பது
  • ஒரே மாதிரி இருக்கும் எழுத்துகளை மாற்றி எழுதுவது ( எ.கா.: க், ச், போன்ற எழுத்துகள்)
  • நிறைய எழுத்துப் பிழைகள் செய்வது
  • உச்சரிப்பில் பிழை செய்வது
  • வாசிக்கப்படுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாமை, அல்லது மறந்து விடுவது
  • கணிதத்திலும் சிரமங்கள் இருக்கலாம்
  • மணி பார்த்தறிவதில் சிரமம்
  • சொந்த வேலைகளை நேரத்திற்குச் செய்ய முடியாமை
  • சொந்த வேலைகளைத் தானே செய்துகொள்ள முடியாமை (சட்டையில் ஒழுங்காகப் பட்டன் போடமுடியாமை, மற்றும் காலணியைச் சரியான காலில் போட்டு அதன் கயிற்றைக் கட்ட முடியாமை)
  • நினைவாற்றல் குறைவு (நாள், கிழமை, நேற்று, இன்று போன்ற காலக் கணிப்பை நினைவில் நிறுத்த முடியாமை)
  • கை கால் மற்றும் உடல் அசைவுகளை ஒன்றிணைக்க முடியாமை

Dyslexia Childமேல் தரப்பட்டிருக்கும் பட்டியல், டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளின் பெரும்பாலான தன்மைகளைத் தருகிறதே தவிர, முழுமையான பட்டியல் அல்ல. வேறு சில சிக்கல்களினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணத்திற்கு, ADD (Attention Deficit Disorder) எனும் கவனத்தை நிலை நிறுத்த முடியாமை அல்லது ADHD (Attention Deficit Hyperactivity Disorder) எனும் கவனக் குறைவு மற்றும் நிலை கொள்ளாமை என்ற பாதிப்புகள். இக்குழந்தைகளை ஒர் இடத்தில் உட்கார வைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும்!

நிலை கொள்ளாமையை சில பெற்றோர்கள் செல்லமாகவும், தன் பிள்ளை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இவ்வாறு செய்வதனால் பிற்காலத்தில் பெரிய அறிவாளியாக வருவான் என்றும் நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. இப்பிள்ளைகளுக்கு வேண்டுவதெல்லாம் அவர்களுக்கு ஏற்ற பிரத்தியேகப் பயிற்சி மற்றும் பெற்றோர் ஆசிரியரின் அரவணைப்பு.

முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது, மேல் குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஒருசேர ஒரு பிள்ளையிடம் இருக்க வேண்டியதில்லை என்பதைத்தான். அதே நேரத்தில் இந்தக் குறைகள் அதிக அளவிலும் இருக்கலாம் மிகக் குறைவாகவும் இருக்கலாம்.

dyslexia affectsஒரு பிள்ளை, வளர்ச்சிக் கோட்டில் (continuum) எங்கு இருக்கிறான்/றாள் என்று, அதற்கென்று பயிற்சிபெற்ற கல்வியாளர்கள் பிரத்தியேகச் சோதனையின் மூலம் மதிப்பிடமுடியும். அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் கற்பிக்கும் தளத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள். மனோதத்துவ நிபுணர்கள் இந்த மதிப்பீட்டைச் செய்யமுடியும். அவர்கள் கணித்துச் சொன்னபிறகு, டிஸ்லெக்சியாவுக்கான மாற்று போதனை முறை கையாளப்பட வேண்டும்.

அயல் நாடுகளைப் போல, சராசரிப் பள்ளிகள் டிஸ்லெக்சியா உடைய மாணவர்களுக்குப் போதிப்பதற்குப் பிரத்தியேக ஆசிரியர்களைப் பெற்றிருக்கவேண்டும். இதுவே சிறந்த ஏற்பாடு. காரணம் பள்ளிக்கூடம் என்ற பெரிய நீரோட்டத்தில் இந்தப் பிள்ளைகள் கலந்திருப்பது அவர்களுடைய சமூக ஆற்றல்கள் வளர்வதற்கு நன்மை பயக்கும். அது மட்டுமல்லாது  ‘தான் மட்டும் வேறு மாதிரி’ என்ற தாழ்வு மனப்பான்மை எழாமல் இருக்கும்.

எவ்வாறு மலாய் மொழியில் பின்தங்கிய மாணவர்களுக்காக பெரும்பாலான பள்ளிகளில் ஒரு பிரத்தியேக ஆசிரியர் இருக்கின்றாரோ அதேபோல் தமிழ் மொழிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் டிஸ்லெக்சியா உடைய மாணவர்களுக்கு இத்துறையில் கற்பித்தல் பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியர் இருத்தல் அவசியம்.

டிஸ்லெக்சியா உடைய பிள்ளைகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை என்ற முறையில் போதிப்பது சாலச் சிறந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதபோது ஒத்த ஆற்றல் கொண்ட பிள்ளைகளை இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் கொண்ட சிறிய  குழுக்களாகப் பிரித்துப் போதிப்பது நல்லது. எவ்வாறாயினும் ஆசிரியரின் பிளவுபடாத கவனிப்பு இவர்களுக்குத் தேவை.

டிஸ்லெக்சியா பெண்பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளையே அதிகம் பாதிக்கிறது. எல்லா இனத்திலும் இந்தப் பாதிப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பு மரபணு சார்ந்தது என்று அறியப்படுகிறது. சில வேளைகளில், குழந்தை தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும்போது ஏற்படும் அதீதச் சிரமங்களினால் கூட மூளையில் இந்தப் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அடிப்படையில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது, இப்பிள்ளைகளுக்கு மூளை வேறுவிதமாக இயங்குகின்றது என்பதையே. அந்த மாற்று இயக்கத்திற்கு ஏற்றாற்போல் நாம் கற்பித்தல் முறையை மாற்றி கொண்டால் வெற்றி அடைய முடியும்.

ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று எவ்வளவு விரைவாக அறிந்து, வழக்கமான கற்பித்தல் முறையில் குறுக்கீடு (intervention) செய்து பொருத்தமான முறையில் கற்பிக்கின்றோமோ அந்த அளவிற்கு நல்லது.

Taare Zameen Par poster

ஒவ்வொரு குழந்தையும் போற்றத்தக்க குழந்தை! இதை, சில வருடங்களுக்கு முன் இந்தி திரைப்படம் “Taare Zameen Par” மிகவும் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அனைத்துப் பெற்றோரும் ஆசிரியரும் பார்க்கவேண்டிய படம் இது. குழந்தைக்குள் குன்றியிருக்கும் ஆற்றல்களை ஒரு ஆசிரியர் எவ்வாறு மலரச் செய்கிறார் என்பதே கதையின் கரு.

இத்தகைய டிஸ்லெக்சியா குறையுடைய பிள்ளகளும் நமது பிள்ளைகளே என்ற உணர்வும் நமது சமுதாயத்தின் ஓர் அங்கமான அவர்களது கல்வி மேம்பாட்டில் கரிசனமும் கொள்ளவேண்டியது இந்த நாட்டுத் தமிழினத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று.

படிக்க அறியாப் பிள்ளைகளைப் பரிவுடன் காண்போம் வாரீரே!

செய்வதறியாப் பிள்ளைகளைச் சேர்ந்தே காப்போம் வாரீரே!

******

(‘டிஸ்லெக்சியா’ குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை முனைவர் முல்லை ராமையா மலாயாப் பல்கலைக் கழகத்தில்  நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வரங்கில் சமர்ப்பிக்கின்றார்.

இவரது ஆய்வு ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும். டிஸ்லெக்சியா தொடர்பில் மேலும் விளக்கங்கள், தகவல்கள் பெற விரும்புவோர் முனைவர் முல்லை ராமையாவை கீழ்க்காணும் இணைய அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ டிஸ்லெக்சியா பற்றிய கேள்விகள் இருப்பினும் இந்த இணைய அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)

mullairamaiah10@hotmail.com