பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 – மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசு கடப்பாடுடன் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
இப்பணியில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மலேசியா இணைந்து செயல்படும் என விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தாருக்குப் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
“இன்று என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் எம்.எச்.370 விமானத்தில் இருந்த பயணிகளின் குடும்பங்களுடன் இணைந்துள்ளது. விமானத்தை தேடும் பணி தொடரும்”.
“விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளன,” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நஜிப் பதிவிட்டுள்ளார்.
எம்.எச். 370 மாயமானது ஒரு விபத்து என்று மலேசிய விமானப் போக்குவரத்து துறை வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கைகள் நீடிக்கும் என விமானப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அசாருடின் அப்துல் ரஹ்மானும் தெரிவித்துள்ளார்.