மெக்சிகோ, பிப்ரவரி 1 – பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசி, ஏலியன் இதுபோன்ற வார்த்தைகளை கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு பயம் கலந்த ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. காலம் காலமாக உலக நாடுகள் வான்வெளி பற்றியும், பூமியைத் தாண்டி வேற்று கிரகங்கள் பற்றியும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
பல்வேறு நாடுகளில் அவ்வபோது வேற்றுகிரக வாசி வானில் பறந்தான், பறக்கும் தட்டை பார்த்தோம் என்று மக்கள் கூறுவதுண்டு. பலர் புகைப்படங்களையும், காணொளிகளையும் கூட வெளியிடுவதுண்டு. இவை சிறிது நாட்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களும் வசூலை வாரிக் குவித்துள்ளன.
இந்நிலையில், மெக்சிகோவில் தற்போது வேற்றுகிரக வாசி பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சுமார் 300 மைல் தொலைவில் உள்ள கோலிமா என்ற எரிமலைககருகே, பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பெண் ஒருவர் பார்த்துள்ளார். அந்த காட்சியை புகைப்படமாகவும், காணொளியாகவும் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “எரிமலைக்கு அருகே அதனை நான் பார்த்தபோது ஒரு குதிரை போன்ற தோற்றத்தில் இருந்தது. குறுகிய மேல்பாகம், பருத்த மத்திய பாகமும், கூர்மையான கீழ்பாகமுமாக அது இருந்ததால், நிச்சயமாக பறவையாக இருக்க முடியாது என உறுதிபடுத்திக் கொண்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
பறக்கும் குதிரையின் காணொளியையும் அவர் இணைதளத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அதனை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். இது தொடர்பாக வேற்றுகிரக வாசி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் கராஸ்கோ என்பவர் கூறுகையில், “எரிமலைகள் ஏலியன்களை ஈர்க்கக்கூடிய ஒரு இடமாகவே இருந்து வருகின்றன. அவர்கள் நம் கிரகத்தின் மாதிரிகளை எடுத்துச் செல்ல வந்திருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
எது எப்படியோ அடுத்த ஹாலிவுட் படங்களில் பறக்கும் குதிரை வடிவ ஏலியன்களை நாம் காணலாம்!