Home நாடு “எங்கே போகிறது மஇகா? சண்டையால் சீர்குலைவா?” – தமிழ் மணி கட்டுரை (பாகம் 2)

“எங்கே போகிறது மஇகா? சண்டையால் சீர்குலைவா?” – தமிழ் மணி கட்டுரை (பாகம் 2)

967
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – (மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. தமிழ்மணி மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமாவார். இந்தக் கட்டுரையின் முதல் பாகம் ஜனவரி 31இல் செல்லியலில் இடம் பெற்றது)

Tamil Mani

                                                                       (கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணி )

யார் இந்தியர்கள்?

#TamilSchoolmychoice

இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள் யார்-யார்?

– தமிழர்கள்

– தெலுங்கர்கள்

– மலையாளர்கள்

– கன்னடர்கள்

– குஜராத்திரியர்கள்

– பஞ்சாபியர்கள்

இப்படி இன்னும் பல பிரிவினர்! இருப்பினும் இவர்களுக்கு இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் உண்டு! ஆட்சி -அதிகாரமும் அவரவர் மாநிலத்தில் உண்டு!

Malaysia Indian Unrest

இத்தகைய கட்டமைப்பில் இருந்தவர்கள் இருப்பவர்கள், மலேசியாவில் இந்தியர்கள் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறோம். அவ்வளவுதான் இதில் நமக்குரிய வடிவம் என்ன?  -தமிழர்கள்!

அப்படி அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் இங்கும், மொழிவாரியாகவும் இனவாரியாகவும் தமிழர்களைத் தவிர மற்றவர்கள் தனி இயக்கம் கண்டு சுயமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார அடிப்படையிலும், வளமான வாழ்விலும் அவர்கள் தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்கிறார்கள்.

இவர்களைப் போலவே தமிழர்களை ஒரு குடையின் கீழ் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் அகில மலாயாத் தமிழர் சங்கம் நிறுவப்பட்டு, அச்சங்கம் எழுச்சி பெற்று வளரும் வேளையில், அதனுடைய முயற்சி முடிவுக்கு வந்தது.

தமிழர்களிடையே எழுந்த பதவி சண்டையாலும் சாதியின் ஆதிக்க வெறியாலும், அச்சங்கம் முடங்கிப்போனது. அதனால் இதற்கெல்லாம் முன்மாதிரியாக மற்ற இனத்தவர்களின் இன இயக்கங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி     பெற்றன.

தமிழர்கள் முகத்தில் கரியையும் பூசிக் கொண்டிருக்கின்றன.

நமது பலவீனத்தில் சில பகுதிகள்!

எனவே, இதிலிருந்து அடிப்படையாகத் தெரிகிற உண்மை! இந்தியர்களாக மற்றவர்கள் இருப்பதில்லை. அவர்கள் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழர்கள் மட்டும் இன்னும் இந்தியர்களாக இருக்கிற[ர்கள். அல்லது அப்படி இருக்க விரும்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

இந்தியர்கள் என்று அடையாளமிட்டவர்கள் எல்லாம் தங்களுக்குரிய இடம் எதுவென்று தேடி தனிக்குடித்தனம் நடத்துவதை நடப்பில் பார்க்கும்போது, தமிழர்கள் மட்டும் இன்னும் தங்களுக்குரிய தனி அடையாளத்தை யாருக்காகவோ தொலைத்து இருக்கிறார்கள் என்பது வியப்பிற்குரியதே!

இந்துக்கள் என்பவர்கள் யார்?

MIC-Logo-Featureசரி! அதே இந்தியர்களில் பெரும் பகுதியினர் இந்துக்கள் என்று மத அடிப்படையில் அடையாளமிட்டிருக்கிறார்கள். இதில் இந்துக்கள் என்பவர்கள் யார்? அவரவர் மொழிவாரியாகவும் இனவாரியாகவும் உள்ள அடையாளத்தைத் தவிர்த்து விட்டு, சைவர்கள் – வைணவர்கள் – சமணர்கள் – அடுத்து பெளத்தவர்கள் என்கிற தனித் தனி மதவழி அடையாளத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இந்துக்கள் என்கிற அடிப்படையில் மதத்தை நோக்கி நுழைந்தாலும், ஒவ்வொரு மதத்திற்குரிய வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த இந்துக்கள் என்கிற கூட்டுக்குள் அடைபட முடியாத நிர்ப்பந்தமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமளவு பார்ப்பனர்கள், ஆதிக்க செயல்பாட்டின் அடிப்படையில் ஆலயங்களிலும், வழிப்பாட்டுத் தலங்களிலும் தங்களின் ஆதிக்கத்தால் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் இந்துக்கள் ஒன்றுபட முடியாத அளவுக்கு அச்சம் தொடர்ந்து சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இந்தியர்கள் என்ற வீட்டிற்குள் அழைத்துப் பார்க்க நினைக்கிற ஒவ்வொரு இனத்திற்கும். ஒவ்வொரு பெருநாளும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதுமட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் தனித் தனி புத்தாண்டு முத்திரைகளும் முந்தி வலுச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இங்குதான் கிறிஸ்துவத்தை ஏற்ற மக்களுக்கும், முஸ்லீம் மதத்தை ஏற்ற மக்களுக்கும் இன்னும் பிற மதங்களை ஏற்ற மக்களுக்கும் மத அடிப்படையில் இருக்கிற ஒற்றுமை, ஒருமைப்பாடு, இந்துக்கள் என்று அடையாளமிட்டிருக்கிற மக்களிடையே வலுப் பெறாமல் இருக்கிறது.

எனவே! இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் இந்துக்கள் என்ற அடிப்படையிலும் ஓர் உடன்பாட்டை – ஒருமைப்பாட்டை  அணுக்கமான இணக்கத்தை இதுவரை காணமுடியாத மக்களிடையே அரசியல் ஒருமைப்பாட்டை காண்பது மிகவும் கடினமானதுதான் என்பதை தனித்து விளங்கிக் கொள்ளமுடியும்.

அதனால்தான் நிறைய அரசியல் கட்சிகள் பிறக்கவும், அதேவேளை வாசகர் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் நிறைய தினசரி பத்திரிகைகளும் முளைக்க காரணமாகிவிட்டன.

அதுமட்டுமல்ல! அரசியல் கட்சிகளின் நல்ல தலைமைத்துவத்தை வழங்கமுடியாத நிலையிலும், ஏகப்பட்ட மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள் என பல உருவெடுக்கவும் காரணமாகிவிட்டன.

மேலும், நாட்டில் பரவலாக இருக்கும் ஒவ்வொரு ஆலயங்களிலும் கோஷ்டி சண்டைகள் தொடர்ந்து – நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகி, சங்கங்களின் பதிவகம் மிரட்டிவைக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன, என்பதற்கான காரணங்கள் பின் தொடரவே செய்கின்றன.

தமிழர்கள் மீதான தாக்குதல்!

இவற்றிற்கிடையேதான் நாம் இந்தியர்கள், இந்துக்கள் என்கிற வட்டத்தை சுற்றி வந்த போதுதான். அதை அடுத்து வேறுபட்டவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

அதாவது தமிழர்கள் என்பவர்கள் யார்?

இதேபோன்ற கேள்விகளை நாம் நம் மலையாளிகளிடமும் இன்னும் பிற இனத்தவரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களிடம் பல்வேறு பிரிவினைகள் இருந்தாலும், தெலுங்கர்கள் என்பதிலே, மலையாளிகள், பஞ்சாபியர்கள், என்பதிலே பெருமளவு சாதி உள்சண்டைகள் கிளம்புவது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. அப்படியே கிளம்பினாலும் அது பெரிய மோதலுக்கும் பகிரங்க விவாதத்திற்கும் வருவது கிடையாது.

சாதி தமிழர்கள்!

ஆனால் இதில் தமிழர்கள் பெருமளவு சாதி தமிழர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு சாதி சங்கங்களின் வழிகாட்டுதலும் தொடந்து கொண்டிருக்கின்றன.

இதேபோன்ற நிலைப்பாட்டில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திகள் இருப்பதில்லை.

இங்கேதான் தமிழர்கள் என்பவர்கள் யார்? யாராக இருக்க முடியும்? ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு சாதியின் அடையாளம் மாட்டப்பட்டிருக்கும் போது, பல சாதிகள் கொண்டவர்கள் தமிழர்களா?

பல சாதிகள் கொண்டவர்கள் தமிழர்கள் என்றால்,  தமிழர் என்ற ஓர் இனத்தின் அடையாளம் எதுவாகயிருக்க முடியும்?

எனவே, மலேசியாவிற்கு வந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் இனவாரியாகவும், மொழி வாரியாகவும் தனித் தனி சங்கம் தங்களுகென கண்ட பிறகு, தங்களுக்குள் தனித்  தனி சாதிகளாக அவர்கள் காண்பதைத் தவிர்த்து விட்டார்கள்.

ஆனால் நமது நிலை அப்படியா?

இனவாரியாக அமைக்கப்பட்ட அகில மலாயாத் தமிழர் சங்கத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சங்கம் கண்டு, அதை நேரடியாக அரசியலில் புகுத்த எண்ணுவது, அல்லது அப்படியொரு பயணத்திற்கு உட்படுத்துவதும் எப்படி ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்?

அந்த வழியில் எப்படித்தான் தொடர்ந்து குளிர் காய முடியும்?

இங்குதான் மஇகா ஒட்டு மொத்தமான பதிலுக்கும் காத்திருக்க வேண்டிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியர் கட்சி என்ற அடையாளத்தை அக்கட்சி பெற்றிருந்தாலும் அப்படி இந்தியர்கள் என்கிற அடிப்படையில் அதற்குரிய சாதி அடையாளம் காட்டப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதில் தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறவர்கள்தான் சாதியின் அடையாளத்தை உள்கட்சி விவகாரத்தில் நுழைக்கிறார்கள் என்றால் மஇகா யாருக்குரிய கட்சி? என்ற கேள்வி பிறக்க நியாயம் இருக்கவே    செய்கிறது!

எனவே, மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வுக்குரிய கட்சியில், தமிழர்களின் அதிக எண்ணிக்கையால் சாதியின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் என்றால், அந்த பயணம் யாருக்கும் பயன்பட போவதில்லை.

சாதியின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய இந்தியாவின் நிலை என்ன? குறிப்பாக தமிழகத்தின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்த்தால் வளர்ச்சியை நோக்கியா நாம் பயணமாகப் போகிறோம் என்பது புலப்படும்.

எனவே, தேசிய அரசியலில் இனவாத போக்கிற்கு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணுகிற நோக்கம் வலுப்பெற வேண்டிய நேரத்தில், அதுகுறித்து சிந்தனைகள் வலுப்பெற வேண்டிய இலக்கில்,

நாம் இந்தியர்கள் என்ற அடிப்படையிலும் தமிழர்கள் என்ற அடிப்படையிலும் வெளிப்படையாக புதைந்து போன சாதியின் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கத் துவங்கினால்,

இனியும் ஆயுதங்கள் நம்மை வீழ்த்த பொது எதிரிகளிடம் இருந்து வரவேண்டியதில்லை.

நமக்குள் இருக்கும் சாதி என்கிற ஆயுதமே போதும் நம்மை வீழ்த்திக்காட்ட என்பதை நினைவில் கொண்டு அனைவரின் அரசியல் பார்வையிலும் பெரும் மாற்றம் நிகழ வேண்டியது அவசியமாகும்!

 – பெரு. அ. தமிழ்மணி

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

wrrcentre@gmail.com