Home நாடு மின்சாரக் கோளாறு – பத்துமலை நேற்றிரவு இருளில் மூழ்கியது

மின்சாரக் கோளாறு – பத்துமலை நேற்றிரவு இருளில் மூழ்கியது

708
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 3 – இன்று நாடெங்கிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், நேற்றிரவு பத்துமலை வளாகம் மின்சாரக் கோளாறால் இருளில் மூழ்கியது.

இரவு ஏறத்தாழ 8.53 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத் தடை நள்ளிரவு வரை சரி செய்யப்படவில்லை என பெர்னாமா செய்தி தெரிவித்தது. இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.Batu Caves in Darkness Thaipusam 2015

பத்துமலை இருளில் மூழ்கிய காட்சியை புகைப்படமாக எடுத்து பக்தர் ஒருவர் நட்பு ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். அந்தப் படம் இதுதான்…

#TamilSchoolmychoice

மின்சாரக் கோளாறை சரி செய்ய தேசிய மின்சார வாரியம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது என ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான என்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிவாரணமாக, மின்சார வாரியத்தின் செயற்கை மின் உற்பத்தி இயந்திரத்தைக் (generator) கொண்டு விளக்கொளி பத்துமலை வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டாலும், அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

மேலும் கூடுதலான செயற்கை மின் உற்பத்தி இயந்திரங்களை நிர்மாணிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பௌர்ணமி முழு நிலவின் ஒளி மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது. அந்த வெளிச்சத்திலும், சுற்றியிருந்த கடைகளில் இருந்த விளக்கொளியின் உதவியோடும் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

பத்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் இருளில் மூழ்கியிருந்ததாகவும், சில இடங்களில் கும்மிருட்டு சூழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அலி அகமட், மின்சாரத் தடை காரணமாக, காவல் துறையினர் தீவிர விழிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தடைக்கான காரணங்களை மின்சார வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்று மின்சாரத் தடையினால் பத்துமலை இருளில் மூழ்கிய சம்பவம் நடந்ததில்லை என சில பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.