கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நடந்து முடிந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மூன்றாம் நாள் அமர்வில் முனைவர் முல்லை ராமையா “வாசிக்க மற்றும் எழுத இயலாத கற்றல் குறைபாட்டின் (டிஸ்லெக்சியா) விளைவுகளும், தீர்வும்” என்ற தனது ஆய்வேட்டை சமர்ப்பித்தார்.
அவரது ஆய்வரங்கில் திரளான அளவில் பேராளர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வரங்கில் கட்டுரை சமர்ப்பிக்கும் முனைவர் முல்லை ராமையா
“டிஸ்லெக்சியா” எனப்படும் உடல் நலக் குறைபாடு குறித்து நீண்ட காலமாக ஆய்வில் ஈடுபட்டு வரும் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான டாக்டர் முல்லை ராமையா, இந்த குறைபாடு குறித்து மாணவர்களிடையே விரிவான சோதனைகளை நடத்தியிருப்பதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தான் வழங்கிய பயற்சிகளையும் அதனால் தான் அறிந்தவற்றையும் எடுத்துக்காட்டோடு தனது ஆய்வில் விளக்கினார்.
அவர் ஆய்வுக் கட்டுரையைப் படைத்து முடித்ததும், அவர் கூறிய விவரங்கள் பலரையும் இதுபற்றி மேலும் கூடுதலாக அறிந்து கொள்ள ஆர்வமூட்டியுள்ளது என்பது, அதன் பின்னர் தொடர்ந்த கேள்வி பதில் அங்கத்தில் பேராளர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன?
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆய்வுகளை மேற்கோள்காட்டிப் புள்ளி விவரத்தோடு கூறிய அவர் “நாட்டின் 523 தமிழ்ப் பள்ளிகளின் நிலைமையும் இதுதானா அல்லது இதைவிட மோசமானதா இருக்குமா” என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
முல்லை ராமையாவின் ஆய்வரங்கில் கலந்து கொண்ட பேராளர்களில் ஒரு பிரிவினர்
தகவல், கல்வி மேம்பாட்டு மையம் (CHILD), ஆய்வுக்கு உட்படுத்திய 10 ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில், 10 முதல் 20 சதவிகித மாணவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
குற்றவாளிகளில் 40 முதல் 70 விழுக்காட்டினர் டிஸ்லெக்சியா குறையுடையவர்களாக உள்ளனர் என்பதை வெளிநாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்தார்.
ஆரம்ப நிலையிலேயே டிஸ்லெக்சியா குறையைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்தால் இவர்கள் குற்றவாளிகளாவதைத் தவிர்க்கலாம். என்றும் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு இந்த இளைஞர்களிடையே வாழ்க்கையில் நம்பிக்கையின்மையை, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, பின்னாளில் எளிதில் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுவதாகத் தெரிவித்த அவர் தன்னிடம் உதவிக்கு வரும் டிஸ்லெக்சியா உடைய தமிழ்ப் பள்ளி மாணவர்களைக் கொண்டும், பல தமிழ் ஆசிரியர்களுடனான உரையாடல்களின் வழியும் தான் அறிந்தவைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தேவை
டிஸ்லெக்சியாவினால் பாதிக்கப் பட்டிருக்கும் பிள்ளைகளால் எழுத்துருவில் அல்லது வரைபொழிவில் இருக்கும் வடிவங்களைக் கிரகிக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நிச்சயமாக ஒரு நோயல்ல, என வலியுறுத்திய அவர் இது மரபணு மற்றும் நரம்பியல் பிரச்சினையாக இருக்கக்கூடும் என்றும் சராசரி மாணவர்களுக்குப் பயன் படுத்தப்படும் அதே கற்பித்தல் முறையைக் குறையுடைய மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கற்பித்தலால் அவர்கள் சிறிதும் பயன் பெறமுடியாது என்று ஆய்வு பூர்வமாகத் தெரிவித்தார்.
டிஸ்லெக்சியாவுக்கான அறிகுறிகள் பற்றித் தெளிவுபடுத்திய அவர், இதற்கான மாற்று போதனை முறை கையாளப்பட வேண்டும் என்றும்
அயல் நாடுகளைப் போல, சராசரிப் பள்ளிகள் டிஸ்லெக்சியா உடைய மாணவர்களுக்குப் போதிப்பதற்குப் பிரத்தியேக ஆசிரியர்களைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பள்ளிகளில் நடைபெறும் குறை நீக்கல் வகுப்பு பற்றியும் அவரது ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட சில ஆசிரியர்கள் அதுபற்றித் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.
இந்த ஆய்வரங்கில் அவர் தான் சுயமாகத் தயாரித்து, நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தின் நெறிமுறைகளை, ஒலி வழிக் கற்பித்தலை நடத்தியும் காட்டினார்.
கேள்வி நேரம் முடிந்தும் பலர் இதுபற்றி ஆர்வமுடன், கேட்டவண்ணம் இருந்தனர். இவ்வரிய முயற்சி முழுப்பலனை அடைய அரசு முதல் அனைவரும் முயன்று வெற்றி பெறச்செய்வதன் மூலம், இந்திய மாணவர்கள் கடைநிலை வகுப்புகளுக்குத் தள்ளப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் காப்பாற்ற முனைவர் முல்லை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முல்லை அவர்கள், இந்த பாடமுறையை கற்றுத் தர ஆசிரியர்களுக்கு பொறுமை மிகமிக அவசியம் என்றும், கதை, சந்தப் பாடல்கள், இதற்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகள் துணை கொண்டு ஆசிரியர்கள் தம்மோடு கைக்கோர்த்து, பயணித்தால் இதன் முழு வெற்றியை அடையமுடியும் என்றும், “டிஸ்லெக்சியா” உடைய மாணவர்கள் இதனால் பயனடையும் பட்சத்தில் தனது ஒரு வருட உழைப்பின் பயன் தன்னை மகிழ்விக்கும் என்றும் தெரிவித்தார்.
(பின்குறிப்பு : ‘டிஸ்லெக்சியா’ கற்றல் குறைபாடு குறித்து முனைவர் முல்லை ராமையா எழுதி, ஏற்கனவே செல்லியலில் இடம்பெற்ற விரிவான ஆய்வுக் கட்டுரையை வாசகர்கள் கீழ்க்காணும் இணைய இணைப்புகளின் வழி படிக்கலாம்)
http://www.selliyal.com/?p=79094 – கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) விளைவுகளும், தீர்வுகளும் (பாகம் 1 )
http://www.selliyal.com/?p=79097 – கற்றல் குறைபாட்டின் (டிஸ்லெக்சியா) விளைவுகளும் தீர்வும் (பாகம் 2)