பத்துமலை, பிப்ரவரி 4 – சுமார் 16 லட்சம் பேர் கூடியிருந்த பத்துமலை பகுதி முழுவதும் நேற்று பக்தி மணம் கமழ்ந்தது. எங்கெங்கும் காவடிகளும், வெறும் பாதங்களுடன் நேர்த்திக்கடனைச் செலுத்த வந்த பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என பத்துமலையில் பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்தது.
இந்த ஆண்டும் தைப்பூச கொண்டாட்டத்தைக் காண வந்திருந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப். அவர் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மாவுடன் காலை 10.30 மணியளவில் பத்துமலை வந்தடைந்தபோது மஇகா தலைவர்களும், இந்து சங்கங்களின் நிர்வாகிகளும், சமுதாய பிரமுகர்களும் வரவேற்றனர்.
இதையடுத்து 125ஆவது தைப்பூச திருவிழா நிகழ்வுகளை பிரதமர் தம்பதியர் சுமார் ஒருமணி நேரம் கண்டு களித்தனர். கோவில் நிர்வாக அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மாடத்தில் இருந்து நிகழ்வுகளைக் கண்ட பிரதமருடன், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல், உதவித் தலைவர் டத்தோ சரவணன், மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ சாமிவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக பிரதமர் தம்பதியர்க்கு கோவில் நிர்வாகக் குழு சார்பாக அதன் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
மேலும், பாரம்பரிய முறைப்படி பிரதமர் தம்பதியருக்கு தங்க நிற சால்வைகள் அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைப்பூசத்தையொட்டி பிரதமர் நஜிப் இந்தியப் பாரம்பரிய உடையான குர்தா அணிந்து வந்திருந்தார். கோவில் வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடலென திரண்டிருந்த பக்தர்களை நோக்கி அவர் அவ்வப்போது உற்சாகத்துடன் கையசைத்தபடி இருந்தார்.
பின்னர், இதர முக்கிய பிரமுகர்களுடன் காலை சிற்றுண்டியை சுவைத்த பிரதமர் தம்பதியர், காலை 11.30 மணியளவில் புறப்பட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் கௌரவ செயலர் ஆர்.டி.சுந்தரம், பிரதமரின் வருகையானது நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மீது நாட்டின் உயர்நிலை தலைவருக்கு உள்ள அக்கறையை வெளிக்காட்டுவதாக அமைந்தது என்றார்.
“பிரதமரின் வருகை மிக அர்த்தமுள்ளது. ஏனெனில் இது 125ஆவது தைப்பூச கொண்டாட்டமாகும். கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக மலேசியாவில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இன மக்கள் வாழும் மலேசியாவில் நிலவும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் தைப்பூசத் திருவிழா அமைந்துள்ளது,” என்றார் சுந்தரம்.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் மின்தடையை தவிர்த்து, இந்தாண்டும் தைப்பூச கொண்டாட்ட நிகழ்வுகள் மிக அமைதியாக நடந்தேறின.