Home உலகம் சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல்: 3 சிங்கப்பூரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்!

சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல்: 3 சிங்கப்பூரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்!

548
0
SHARE
Ad

justiceசிங்கப்பூர், பிப்ரவரி 7 – சிங்கப்பூரில் தைப்பூச திருவிழாவின் போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மூன்று சிங்கப்பூர் இந்தியர்கள் இன்று காலை அந்நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ராமச்சந்திரா சந்திரமோகன் (வயது 32) என்பவர் மீது 4 காவல்துறையினரை தாக்கியது, தகாத வார்த்தைகளை உச்சரித்தது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜெயகுமார் கிருஷ்ணன் (வயது 28) என்பவர் மீது 3 குற்றங்களும், குணசேகரன் ராஜேந்திரன் (வயது 33) என்பவர் மீது காவல்துறையினரின் கடமையை செய்யவிடாமல் தடுத்த குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு தைப்பூசத்தில் இசைக் கருவிகளை வாசிக்க சிங்கப்பூர் அரசாங்கம் தடை விதித்திருந்தது. எனினும், இந்த மூன்று பேரும் இசைக் கருவிகளை வாசிக்கும் குழுவினரை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர்.

இந்நிலையில், ஒலி எழுப்பக்கூடாது என்று காவல்துறையினர்  அவர்களை தடுத்து நிறுத்திய போது இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சீனர்களின் சிங்க நடனம், மலாய்காரர்களின் திருமணம் ஆகியவற்றிற்கு இசைக் கருவிகளை பயன்படுத்தும் போது, ஏன் தைப்பூசத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “மத சாந்த ஊர்வலங்கள் உள்ளிட்ட எந்த  ஒரு ஊர்வலத்திற்கும் இசைக் கருவிகளை வாசிக்க கூடாது என்ற சட்டம் கடந்த 1973-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சிங்கப்பூர் சட்டம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”சிங்க நடனங்கள் மற்றும் மலாய் திருமண இசை நிகழ்வுகள் ஆகியவை சமூக நிகழ்வுகள், அவை மதம் சார்ந்தவை அல்ல. சிங்கப்பூரில் இந்துக்களுக்கு மட்டுமே மதம் சார்ந்த ஊர்வலங்கள் நடத்த அனுமதி உள்ளது. எனவே காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவருக்கும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 3 மாதம் முதல் 7 வருடங்கள் வரை சிறை தண்டனையோ அல்லது 2000 டாலர் முதல் 5000 டாலர் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

காவல்துறையினரை தாக்கிய குற்றத்திற்காக ராமச்சந்திரா என்பவருக்கு மட்டும் பிரம்படி வழங்கப்படலாம்.