கோலாலம்பூர், பிப்ரவரி 6 – நாடெங்கிலும் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இப்போதெல்லாம், தைப்பூசம் ஒருவாரத்துக்கு நீளும் திருவிழாவாக, ரத ஊர்வலம், காவடி அணிவகுப்புகள் என விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தலைநகர் பத்துமலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: –
தேர் இல்லாத திருவிழாவா? இந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் பத்துமலை முருகன் உற்சவ மூர்த்தியாக, கோலாலம்பூரின் தெருக்களில், ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமலை நோக்கி உலா சென்றபோது….
பத்துமலை நோக்கி ரத ஊர்வலம் செல்லும் வழியெங்கும் தேங்காய்களை உடைத்து மக்கள் தங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காட்சி.
தெய்வத்தின் முன்னால் தேங்காய் உடைப்பது என்பது இந்து சமய சம்பிராதயத்தில் சில தத்துவங்களை உணர்த்துவதற்காக, பின்பற்றப்படும் வழக்கம்.
ஆனால், இப்போதெல்லாம், பிரார்த்தனை, வேண்டுதல் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை விலைகொடுத்து வாங்கி, அவற்றை ரதம் செல்லும் தெருக்களில் மக்கள் உடைத்து மகிழ்கின்றார்கள். பின்னாடியே வரும் மாநகரசபை குப்பை லாரிகளும், சில சமயங்களில் சிதறு தேங்காய் கொள்முதல் செய்பவர்களும், அவற்றை அப்படியே வாரி எடுத்துச் செல்கின்றார்கள்.
சிதறும் தேங்காயைப் போல தேங்காய் உடைப்பதில் பொதிந்துள்ள தத்துவமும் இதனால் சிதைந்து விடுகின்றது.
இனியாவது, பக்தர்கள், பிரார்த்தனைக்கென்று சில தேங்காய்களை மட்டும் உடைத்து, எஞ்சிய தேங்காய்களுக்கு செலவு செய்யுப் பணத்தை, அனாதைப் பிள்ளைகளுக்கோ, அறப் பணிகளுக்கோ, கல்விக்காக பணம் இன்றி தடுமாறும் பள்ளிப் பிள்ளைகளுக்கோ வழங்கினால், அவர்களும் மகிழ்வர் – முருகனும் நிச்சயம் மகிழ்வார்.
பத்துமலைப் படிக்கட்டுகளில் பக்தர்கள் படியேறும் பின்னணியில், தங்க நிறத்தில் தமிழ்க் கடவுள் முருகன் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்…
தலையில் தாங்கிய பால்குடங்களோடு பத்துமலை முருகனை நோக்கி அணிவகுத்துச் செல்லும் மகளிர்….
பத்துமலை முருகனுக்கு வேல் வேல் – என்ற முழக்கத்துடன் காவடி எடுத்துச் செல்லும் பக்தர் ஒருவர்…
காவடி எடுக்கும் அரிவாள் மீது ஒருவரை ஏந்திச் செல்லும் பக்தர்கள்….
காவடி எடுப்பது என்பது அர்த்தம் பொதிந்த, பக்தி ததும்பும் சில புராணக் கதைகளின் காரணமாகத் தமிழர்களிடையே உருவெடுத்த வழக்கம்.
இருப்பினும், காலப் போக்கில், அரிவாள் மீது நடப்பது, கொக்கிகளை உடலில் குத்தி, சதைகள் கிழியும் வண்ணம் காவடிகளை இழுத்துச் செல்வது என காலத்துக்கு ஒவ்வாத – பக்தி என்று ஒப்புக் கொள்ள முடியாத – சில நடைமுறைகள் நம்மிடையே பரவி விட்டன.
மலேசிய இந்து சங்கம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் போன்ற அமைப்புகள் எவ்வளவோ கேட்டுக் கொண்டாலும், எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தாலும், இன்னும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த முறை தைப்பூசத்திற்கு முதல் நாள் இரவு எதிர்பாராத மின்சாரக் கோளாறால், பத்துமலை வளாகம் இருளில் மூழ்கி, பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும், காவடி எடுப்பது போன்ற நடைமுறைகள் குறைந்த விளக்கொளியில், பௌர்ணமி முழு நிலவின் துணையோடு தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
அலகு குத்தலோடு, காவடி எடுக்கத் தயாராகும் பக்தர் ஒருவர்…
வெண்மேகங்கள் இழையோட, நீலவானப் பின்னணியில் பால்குடம் ஏந்தி, பக்தி ததும்ப, பத்துமலை நோக்கி நடைபோடும், பக்தர் ஒருவர்…
படங்கள்:EPA