Home உலகம் சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல் – அமைதி காக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்

சிங்கப்பூர் தைப்பூசத்தில் மோதல் – அமைதி காக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்

715
0
SHARE
Ad

MOF070414eசிங்கப்பூர், பிப்ரவரி 6 – தைப்பூசத்தன்று நிகழ்ந்த முறைகேடான சம்பவம் தொடர்பில் சிங்கப்பூரர்கள் அமைதி காக்க வேண்டும் என அந்நாட்டின் இரண்டாவது உள்துறை அமைச்சர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதன்கிழமையன்று சிங்கப்பூரிலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இச்சமயம் மேளங்களை வாசிப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

இசைக்கருவிகளை இசைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்த போதிலும், அதற்கு உடன்பட மறுத்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த அமைச்சர் ஈஸ்வரன், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் செயலுக்கு எதிராக சிங்கப்பூர் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“சிங்கப்பூர் பல்வேறு மதங்களைக் கொண்ட சமூகமாக உள்ளது. இங்கு ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வுடனும் மரியாதையுடனும் செயல்பட வேண்டியது அவசியம். நமது பண்டிகைகளை மதித்து நாம் கொண்டாடும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒட்டுமொத்த அளவில் சமுதாயத்தில் ஒரு சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றார் ஈஸ்வரன்.

நாட்டில் நல்லிணக்கம் நிலவ சிங்கப்பூரர்கள் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனி நபர்கள் சிலரது செயல்பாடுகளால் அந்த நல்லிணக்கத்திற்கு ஊறு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் இணையத்தில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய தகவல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

“தைப்பூசத்தின் போது இசைக்கருவிகளை இசைப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இது தொடர்பாக சில குழுக்களிடையே போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக ஊர்வலத்திற்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும் தடை ஏற்படுகிறது. பக்தர்கள் சிலர் காயமடைகின்றனர்,” என்றும் அமைச்சர் ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே அக்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 3 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக தகாத, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் அறிக்கை ஒன்றில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்ட 3 ஆடவர்களும் மது அருந்தியிருந்ததாகவும் காவல்துறை அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.