Home உலகம் காவல்துறையினர் மீதான தாக்குதலை ஏற்க இயலாது: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

காவல்துறையினர் மீதான தாக்குதலை ஏற்க இயலாது: சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

640
0
SHARE
Ad

சிங்கப்பூர், பிப்ரவரி 6 – தைப்பூசத் திருவிழாவின்போது காவல்துறையினரை சிலர் தாக்கியது ஏற்க முடியாத செயல் என சிங்கப்பூர் வெளியறவு மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறப்படுவதையும் தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Shanmugam Singapore Minister“சிங்கப்பூரில் சிங்க நடனம், கொம்பாங் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும்போது ஏன் தைப்பூசத் திருவிழாவில் மட்டும் இசைக் கருவிகளை இசைக்க தடைவிதிக்கப்படுகிறது என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது சிங்கப்பூரில் உள்ள விதிமுறைகளை தவறாக புரிந்து கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. உண்மையில் சிங்கப்பூரில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை. மாறாக மற்றவர்களைக் காட்டிலும், இந்துக்களுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 1964ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்துக்குப் பின்னர் சிங்கப்பூரில் ஊர்வல பேரணிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்துக்களுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 3 தருணங்களில் பேரணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

தைப்பூசம், பங்குனி உத்திரம், தீ மிதி வைபவங்களின்போது இந்துக்கள் பேரணி மேற்கொள்ள அனுமதி உண்டு என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“வேறு எந்த மதத்திற்கும் சிங்கப்பூரில் இத்தகைய சலுகை கிடையாது. மிக அரிதாக பிற மதம் சார்ந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும் தைப்பூசப் பேரணி நாள் முழுவதும், சிங்கப்பூரின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பிற மதப் பேரணிகளுக்கு இத்தகைய அனுமதி கிடையாது” என்றும் அவர் கூறினார்.

“சிங்க நடனம் மற்றும் கொம்பாங் ஆகியவை சமூக நிகழ்வுகளில் மட்டுமே இடம்பெறுகின்றன. அவை பெரும்பாலும் மதம்சார்ந்த நிகழ்வுகள் அல்ல. அதேசமயம் இந்து சமூக நிகழ்வுகளில் நாதஸ்வரம் மற்றும் மேளங்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்றும் சண்முகம் மேலும் கூறியுள்ளார்.

தைப்பூசத்தின்போது போலிசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பிட்ட அச்சம்பவத்தின்போது போலிசாரை நோக்கி ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“காவல்துறை அதிகாரிகள் நம்மை பாதுகாக்கிறார்கள். அவர்களை அவமதிப்பதையோ தாக்குவதையோ நிச்சயமாக ஏற்க முடியாது. சரியான கோணத்தில் சிந்திக்கும் சிங்கப்பூரர்கள் அனைவருமே போலிசார் மீதான தாக்குதலை ஏற்க மாட்டார்கள். இத்தகைய சம்பவங்களை சிங்கப்பூரர்கள் அனைவரும் தாமாக முன்வந்து எதிர்க்க வேண்டும்,” என்று சண்முகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.