Home உலகம் தைவான் விமான விபத்து: இருக்கை மாறி அமர்ந்ததால் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

தைவான் விமான விபத்து: இருக்கை மாறி அமர்ந்ததால் மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

540
0
SHARE
Ad

taiwan-planeதைப்பே, பிப்ரவரி 6 – தைவான் தலைநகர் தைப்பேயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்.

இவர்கள் மூவரும் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பு தங்களது இருக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது தெரிய வந்தது.

லின் என்ற குடும்ப பெயர் கொண்ட ஆடவர், தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகனுடன் விமானத்தின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன் அதன் இறக்கையில் இருந்து அதிக சத்தம் வந்ததால் அசௌகரியமாக உணர்ந்தவர், வலதுபுறம் அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து லின் தனது மனைவி மற்றும் மகனுடன் வலதுபுறத்தில் உள்ள இருக்கைகளுக்கு இடம் மாறினார். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது விபத்துக்குள்ளானது.

அப்போது விமானத்தின் இடதுபுற இறக்கை ஆற்றின் மேல் அமைந்துள்ள பாலத்தின் மீது மோதி பிறகு ஆற்றில் விழுந்தது. இதில் விமானத்தின் இடதுபுறம் அமர்ந்திருந்த பயணிகள் பலரும் பலியாகி உள்ளனர். வலது புறத்தில் அமர்ந்திருந்த லின் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விமானம் ஆற்றில் விழுந்த பின்னர் முதலில் வெளியேறிய லின், பின்னர் தனது மனைவியையும் இழுத்து வெளியேற்றியுள்ளார். நீண்ட நேரம் தன் மகனை காணாமல் தேடிய அவர், பின்னர் ஆற்றில் மிதக்கும் தன் மகனின் முகம் வெளிறி, உதடுகள் நீல நிறமாக மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மீட்புப் படையினர் வருவதற்கு முன்னரே தன் மகனை ஆற்றிலிருந்து மீட்டு கரைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்து அவர் காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து லின்னின் சகோதரர் அளித்த பேட்டியில், “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்களாக உணர்கிறோம்,” என்றார்.