தைப்பே, பிப்ரவரி 8 – தைவானின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமான ‘டிரான்ஸ் ஏசியா’ நிறுவனம் இரண்டாவது முறையாக பெரும் விபத்தை சந்தித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை தைவான் தலைநகர் தைபேயிலிருந்து 53 பயணிகளுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசியா விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேரை தவிர மற்ற அனைவரும் பலியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை 38 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது, கடந்த ஏழு மாதங்களில் மட்டும் டிரான்ஸ் ஆசியா நிறுவனத்தின் சந்தித்துள்ள இரண்டாவது பெரிய விபத்தாகும். இதையடுத்து விமானிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தைவானின் விமானத்துறை ஆணையமும் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. டிரான்ஸ் ஆசியா நிறுவனத்தில் ஏடிஆர் ரக விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு மட்டும் இந்தப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் ஒரு பகுதியாக விமானத்தை இயக்குவது பற்றிய கேள்விகளுக்கு வாய்வழி பதில் சொல்லும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மொத்தம் 71 விமானிகள் பயிற்சி பெற உள்ளனர்.
விமானத்துறை நிர்வாகம் மற்றும் தொழில் நுட்பக்குழு ஒன்றும் இணைந்து நான்கு நாட்கள் நடத்தும் இந்த பயிற்சி சனிக்கிழமை முதல் தொடங்குவதாக டிரான்ஸ் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தைவானில் திங்கட்கிழமையன்று 90 விமானங்களின் சேவை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.