Home நாடு துணைத் தலைவருக்கு சோதிநாதனுக்கு ஆதரவு: பழனிவேல் பகிரங்க அறிவிப்பு

துணைத் தலைவருக்கு சோதிநாதனுக்கு ஆதரவு: பழனிவேல் பகிரங்க அறிவிப்பு

458
0
SHARE
Ad

சிரம்பான், பிப்ரவரி 8 – மஇகா தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ சோதிநாதன் போட்டியிடும் பட்சத்தில் அவரை முழுமையாக ஆதரிக்கத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கட்சியில் தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்து விட்டார் என்றும், இனி கட்சியில் இரண்டு தரப்பினரும் அணி பிரித்து போட்டியில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகி விட்டது என்றும் கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Seremban GP meet 8 Feb - stage

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற சிரம்பான் கூட்டத்தில் இடமிருந்து மாநிலத் தலைவர் கணேசன், பழனிவேல், எஸ்.சோதிநாதன், எஸ்.பாலகிருஷ்ணன்,குமான் அம்மான், முருகேசன், சிவசுப்ரமணியம்

நாடு முழுவதும் கிளைத் தலைவர்களையும், தொகுதித் தலைவர்களையும் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று சிரம்பானில், மஇகா மாநிலக் கட்டிடத்தில் சந்திப்புக் கூட்டமொன்றை நடத்தினார்.

பழனிவேலுவால் நெகிரி மாநிலத் தலைவராக புதியதாக நியமிக்கப்பட்ட கணேசனின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தமுள்ள 362 கிளைகளில் ஏறத்தாழ 110 கிளைகள் மட்டுமே கலந்து கொண்டதாக நெகிரி செம்பிலான் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

GP at Seremban meet 8 Feb

சிரம்பான் கூட்டத்தில் கிளைத் தலைவர்களைச் சந்திக்க வருகை தரும் மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல்…

மற்றவர்கள் அனைவரும் மஇகா உறுப்பினர்கள் என்றும் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் மூன்று தொகுதித் தலைவர்கள் மட்டுமே அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியில் சரிந்து வரும் தனது ஆதரவைத் தூக்கி நிறுத்தும் விதமாக, சிரம்பானில் இன்று மஇகா கிளைத் தலைவர்களைச் சந்தித்த அவர்,  இன்றைய கூட்டத்தில் சுமார் பத்து நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.

அப்போது தேசியத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள தாம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“தற்போது தேசிய உதவித் தலைவராக உள்ளார் சோதிநாதன். அடுத்த கட்சித் தேர்தலில் அவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். அவ்வாறு அவர் போட்டியிடுவார் என்றால் அவருக்கு என்னுடைய முழுமையான, வெளிப்படையான ஆதரவு உண்டு. அவரது வெற்றிக்கு கைகொடுப்பேன்,” என்றார் பழனிவேல்.

Seremban GP meeting 8 Feb

பழனிவேலுவின் சிரம்பான் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…

பழனிவேலின் இந்த வெளிப்படையான அறிவிப்பு மஇகாவினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மஇகாவில் தற்போது சில சிக்கல்கள் நிலவி வருவதாக குறிப்பிட்ட அவர், அவை அனைத்திற்கும் உரிய வகையில் தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கட்சி தற்போதுள்ள சூழ்நிலையில் சிலர் தேவையின்றி வீண் சிக்கல்களை உருவாக்கி வருவதாக அவர் சாடினார். எனவே மீண்டும் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமக்கு பெரும்பாலான கிளைத் தலைவர்களின் ஆதரவு இருப்பதாகவும், அவர்களின் முழுமையான ஆதரவுடன் தாம் வெற்றி பெறப்போவது உறுதி என்றும் பழனிவேல் குறிப்பிட்டார்.

துணைத்தலைவர் பதவிக்கு டத்தோ சோதிநாதனை ஆதரிப்பதாக பழனிவேல் வெளிப்படையாக பேசியிருப்பது மஇகா வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.