Home நாடு ‪‎எதிர்க்கட்சி அரசியலில் நிகழப்போகும் திடீர் விபத்துகள்  – தமிழ்மணி கருத்து!

‪‎எதிர்க்கட்சி அரசியலில் நிகழப்போகும் திடீர் விபத்துகள்  – தமிழ்மணி கருத்து!

625
0
SHARE
Ad

Pakatan-Logo-Featureகோலாலம்பூர், பிப்ரவரி 9 – (அடுத்த பொதுத் தேர்தல் குறித்து ஆளும் தேசிய முன்னணியும், எதிர்க்கட்சிகளும், சிந்திக்கத் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில் – நாளை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கு முடிவு ஏற்படுத்தப்போகும் அரசியல் மாற்றங்கள் குறித்த விவாதங்கள் எழுந்து வரும் காலகட்டத்தில் – எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தான் ராயாட் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கட்டுரை இது).Tamil Mani

பாஸ், ஜசெக, கெஅடிலான் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி அடுத்து நாடு சந்திக்கப் போகும் (2018) பொதுத்தேர்தலிலும் தொடருமா?

அப்படி தொடர்வதற்கு சரியான இலக்கு இக்கட்சிகளிடையே நீடிப்பதற்கு கட்டமைக்கப்பட்டு உள்ளதா?

#TamilSchoolmychoice

இதில் இந்தியர்களின் நிலைபாடு எப்படிப்பட்டதாக அமையப்போகிறது?

பாஸ் இனவாதக் கட்சி

PAS-Logoபாஸ், ஓர் இனவாத – மதவாத கட்சி. 1946ல் இருந்து அதனுடைய கொள்கை ஒரே மாதிரிதான். அக்கட்சி 1969ல் அம்னோவுடன் இணக்கம் கண்டது மலாய்க்காரர்களின் ஒற்றுமை அவர்களின் மதம் சார்ந்த முடிவாக இருந்தது.

அதன் பின் தேசிய முன்னணியில் ஓர் உறுப்புக்கட்சியாகவும் இணைந்தது. எனவே எந்த வகையிலும் அக்கட்சி மலாய்க்காரர்களின் அடிப்படையான உரிமைகளையோ அரசியல் அமைப்புச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளையோ விட்டுக் கொடுத்துவிடாது.

இப்படிப்பட்ட கருத்துடன் அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ள அக்கட்சியுடன் ஜசெக கூட்டணியை வைத்துள்ளது. இதில் ஜசெகவின் அடிப்படையிலான கொள்கை என்ன?

“மலேசியாவுக்குள் அனைவரும் மலேசியரே! இதில் மலாய் மக்களுக்கு மட்டும் இந்நாடு என்கிற குரல் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்” – என்பதுதான்.

இந்த முழக்கத்தை கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து முழங்கிவரும் ஜசெக, ஒரு மதவாத கட்சியுடன் அதுவும் இஸ்லாமிய சட்டங்களால் இந்நாடு ஆளப்படவேண்டும் என்று அழுத்தமாக 70 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்ற ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அரசியல் நடத்த எத்தனிப்பது எந்த வகையில் ஆரோக்கியமான – அவசியமான அரசியலாக இருக்க முடியும்?

எதிர்க்கட்சி அரசியல் அன்வார் என்ற தனிமனிதரின் அரசியல்

Anwar-Ibrahim-Konvensyen-Days-Saing-Komoditi-01இதற்கிடையே கெஅடிலான் கட்சியின் வருகைக்குப் பிறகு ஓரளவு எதிர்க்கட்சி அரசியலில் அதுவரை இருந்து வந்த வாட்டம் நீங்கியது. இருப்பினும் அதுவொரு தனிப்பட்ட மனிதரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியலாகவே அமைந்து விட்டது.

அதனால் அவர் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் சிறைவாசம் உறுதிப்படுத்தப்படுமானால், தேசிய அரசியலில் அதுவும் எதிர்க்கட்சி அரசியலில் பல பாதகமான முடிவுகளுக்கு காரணமாக அந்த முடிவு அமைந்துவிட சாத்தியம். உண்டு.

எனவே எப்படிப் பார்த்தாலும் கடந்த இரண்டு பொதுத்தேர்தலுக்குப்பிறகு எதிர்க்கட்சி கூட்டணி ஒரளவு வலுவாக இருப்பதற்கு அன்வார் என்ற தனிப்பட்ட நபரே காரணமாக இருந்து வருகிறார்.

அதனால் எவ்வளவு காலத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் வலுவாக காலை ஊண்றி நிற்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிக்கு இடையில் அடிக்கடி ஜசெக – பாஸ் கட்சிகளுடன் ஏற்பட்டு வரும் மோதல் பெரும் விரிசலை உருவாக்குமேயானால், அது சீன வாக்காளர்களும் – மலாய் வாக்காளர்களும் பெருமளவில் மோதி அதன் விளைவு தேசிய முன்னணிக்கு வலு சேர்க்கவே செய்யும்.

இதனால் அடுத்து நாடு சந்திக்கப் போகும் பொதுத்தேர்தல் தேசிய முன்னணிக்கு சாதகமான வழியை மீண்டும் ஒருமுறை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

– பெரு.அ.தமிழ்மணி

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற பேஸ்புக் அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com