கோலாலம்பூர் – நேற்று மறைந்த நாட்டின் மூத்த பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள, அவரது நீண்ட கால நண்பரும் மூத்த எழுத்தாளரும், திசைகள் மின்னியல் அலைபேசி தொலைக்காட்சியின் நிறுவனருமான, எழுத்தாண்மை ஏந்தல் பெரு.அ. தமிழ்மணி அன்னார் மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றிய அரும்பணிகள் யாராலும் ஈடு செய்ய முடியாதவை எனப் புகழாரம் சூட்டினார்.
துரைராஜ் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டங்களில் அந்த சங்கத்தின் துணைத் தலைவராக தமிழ்மணி அவரோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவராவார்.
“எனது நீண்ட நெடிய நண்பர் எம். துரைராஜூ காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் அவர் ஆற்றிய பணி மகத்தானதாகும்! பத்திரிகை உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் நண்பர் துரைராஜூ அவர்களின் மரணச்செய்து பேரிடியாக அமைந்தது. தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது” என தமிழ் மணி வெளியிட்ட அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டார்.
“அரசு இதழான உதயத்தின் மூலமாக தோட்டப்புற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படைப்புகளை வெளியிட்ட பெருமை அவரையே சாரும்! அதேவேளை நிறைய செய்தியாளர்களை பத்திரிகைத்துறைக்கு
திருப்பிவிட்ட பெருமைக்குரிய பேராசானாகவும் அவர் திகழ்ந்தார். பத்திரிகைகளில் அளவிட்டு அவர் எழுதிய தலையங்கங்கள் வாசகர்களை வெகுவாக ஈர்த்தன” என்றும் தமிழ் மணி தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.
சிங்கையில் 1955-இல் தொடங்கிய அவரின் பத்திரிகைப் பணியானது, பின்னர் தமிழ்நேசனின் ஆசிரியராக பணியாற்றிய கே சி.அருணின் பாராட்டுக்களைப் பெற்றது. அதேவேளை மலேசிய வானொலி- தொலைக்காட்சியில் அவரின் ஆற்றிய பணி மகத்தானதாகும். அவர் அரசுத் துறையில் ஓய்வு பெறும்வரை “உதயம்” இதழின் ஆசிரியராகவே பணியாற்றினார் என்றும் குறிப்பிட்ட தமிழ்மணி, “குறிப்பாக மலேசியத்தமிழ் சிறுகதைத் துறையை கட்டமைத்த பெருமை
அவரையே சாரும்! சிறுகதைக்கு அவர் நாடெங்கும் நடத்திய கருத்தரங்குகளின் வழி புதிய எழுத்தாளர்களை உருவெடுக்க வைத்த பங்கு மகத்தானதாகும். அதேவேளை மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்தும் அதன் படைப்பாளர்களின் வளர்ச்சி குறித்தும் இவர் கொண்ட கவனயீர்ப்பினால்தான்
எழுத்தாளர் சங்கத்திற்கென “இலக்கியப்பரிசு” வாரியமும் உருவெடுத்தது” என்றார்.
துரைராஜ் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் நாடெங்கும் நூல்நிலையங்கள் அமைக்கும் பணியும்
தொடங்கியது. சிறந்த இலக்கியப் படைப்பாளியான துரைராஜூ அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கும்
பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும் என்றும் தமிழ் மணி குறிப்பிட்டிருக்கிறார்.