கோலாலம்பூர், பிப்ரவரி 9 – மஇகா வட்டாரங்களில் நன்கு பிரபலமானவர் – அனைவராலும், மலர்விழி குணசீலன் என அன்புடன் அழைக்கப்படும் பி.குணசீலன் (படம்).
நீண்ட காலமாக மஇகாவில் தீவிர ஈடுபாட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அவர், கூட்டரசுப் பிரதேசத்தின் பத்து தொகுதியில் மஇகா கிளைத்தலைவருமாவார்.
1980ஆம் ஆண்டுகளில், கோலக்கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த டத்தோ வி.கோவிந்தராஜ், நாடாளுமன்ற செயலாளராக அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டபோது, அவருடைய செயலாளராகவும் பணியாற்றிய வரலாற்றைக் கொண்டவர் குணசீலன்.
கோலசிலாங்கூர் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு, மிகச் சாதாரண சூழ்நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் கடும் உழைப்பால், வணிகத் துறையிலும், அரசியலிலும் முன்னேறியவர் குணசீலன்.
பின்னர் மலர்விழி குணசீலன் என்ற பெயரில் எழுத்துலகிலும் தனது முத்திரையைப் பதித்தவர்.
மாமன்னரிடம் இருந்து டத்தோ விருது பெறும் பி.மலர்விழி குணசீலன்
நெடுங்காலமாக, மஇகா வட்டாரங்களில் ‘நாயகன்’ என்ற சுவாரசியமான பத்திரிக்கையை நடத்தி அறிமுகமானவர், கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக, கோலாலம்பூர் மாநகரசபையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது முதல் அதிரடியாக களமிறங்கி, கோலாலம்பூரில் இந்திய சமுதாயத்தினர் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றார்.
அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு கடந்த பிப்ரவரி1ஆம் தேதி கொண்டாடப்பட்ட கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு அவருக்கு மாமன்னரால் டத்தோ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பட்டத்தைப் பெற அவர் விருது வழங்கும் வைபவத்திற்கு சென்றபோது அங்கு அவருக்கு இரட்டை மகிழ்ச்சி காத்திருந்தது.
காரணம், அவருக்குப் பக்கத்தில் அமர வைக்கப்பட்டவர், டத்தோ பட்டம் வாங்க வந்த மற்றொரு பிரபலமான உலகப் புகழ்பெற்ற சினிமா பிரபலம் ஜாக்கி சான்!
ஜாக்கி சானை நேரடியாக சந்தித்து அளவளாவ வேண்டும் என மலர்விழி குணசீலன் நீண்ட நாளாகக் கொண்டிருந்த கனவும் அன்று அவருக்கு நிறைவேறியது.
“ஜாக்கி சானும் டத்தோ பட்டம் வாங்குகின்றார் என்பது எனக்குத் தெரியும் என்றாலும், அவர் எனக்கு அருகில் அமர்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. விருது வழங்கும் நிகழ்வுக்கு முதல்நாள் நிகழ்ந்த ஒத்திகை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் விருது வழங்கப்பட்ட நாளில் எனக்கு 40 எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டது. அருகில் 39ஆம் எண் கொண்ட இருக்கையில் வந்து அமர்ந்தவர் ஜாக்கி சான்” என அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியொன்றில் குணசீலன் புல்லரிப்புடன் விவரித்திருக்கிறார்.
“ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஜாக்கி சானுடன் பக்கத்திலேயே நான் அமர்ந்திருந்தேன். என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் விருது வழங்கும் நிகழ்வில் எங்களுக்கிடையில் சுவாரசியாமான, உரையாடல்கள் நடந்தன. மாமன்னரிடம் இருந்து இத்தகைய விருது பெறுவது குறித்து தான் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்திருப்பதாகவும், அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஜாக்கி சான் என்னிடம் தெரிவித்தார்” என்றும் குணசீலன் கூறினார்.
மலேசியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டிய ஜாக்கி சான், மலேசியர்கள் மிகுந்த நட்புறவுடனும், ஒத்துழைப்புடனும் பழகுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாமன்னர் விருது வழங்கிய விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றதாக தெரிவித்த ஜாக்கி சான், 350க்கும் மேற்பட்டவர்களுக்கு மாமன்னர் பொறுமையாக இருந்து விருதுகளை எடுத்து வழங்கியது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்றும் பெருமைப்பட்டார்.
தனது புதிய படத்தைப் பற்றி ஜாக்கி சான்
தனது அடுத்த புதிய படமான ‘டிராகன் பிளேட்’ (Dragon Blade) படம் குறித்த சில தகவல்களையும் ஜாக்கி சான் குணசீலனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரையேறும் சரித்திர கால, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய படம் டிராகன் பிளேட்.
அடுத்த இரண்டு வாரங்களில் தனது புதிய படத்தை விளம்பரப்படுத்த மீண்டும் கோலாலம்பூருக்கு வருகை தரவிருப்பதாகவும் ஜாக்கி சான் தன்னிடம் தெரிவித்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார்.
உலக அரங்கில் ஜாக்கி சான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், பழக்கவழக்கங்களில் மிகுந்த பணிவும், எளிமையும், சாதாரண மக்களோடு மக்களாக கலந்து பழகும் தன்மையும் கொண்டவராக இருந்தார் என்றும் குணசீலன் ஜாக்கி சான் குறித்து புகழாரம் சூட்டினார்.
“நான் அவரோடு இருந்த 2 மணி நேரமும் சிரித்த முகத்துடனேயே இருந்த ஜாக்கி சான், நான் கேட்ட கேள்விகளுக்கும், சலிக்காமல் பதிலளித்தார். அவரோடு அன்று நான் செலவிட்ட அந்த இரண்டு மணி நேரங்களும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக அமைந்துவிட்டது. டத்தோ விருது கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம், ஜாக்கி சானோடு இரண்டு மணி நேரம் அளவளாவிய பெருமைமிகு தருணம் என பிப்ரவரி 1 எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது” என மகிழ்ச்சியும், பெருமையும் பொங்க டத்தோ குணசீலன் தெரிவித்துள்ளார்.