ஹாங்காங், பிப்ரவரி 8 – தைவானில் நிகழ்ந்த டிரான்ஸ் ஆசியா விமான விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக அறிவிக்கப்படவில்லை. எனினும் முதற்கட்ட ஆய்வுகளின் வழி விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களிலேயே அதன் ஓர் இயந்திரம் (என்ஜின்) பழுதடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மற்றொரு இயந்திரத்தின் செயல்பாடு அடுத்த நிமிடமே நின்று போயுள்ளது. இதனால் இயங்காத இயந்திரத்துக்கு பதிலாக தலைமை விமானி, நன்றாக இயங்கிய இயந்திரத்தை முடக்கியிருக்கலாம் என விமானத்துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கடந்த புதன்கிழமை தைப்பேயிலிருந்து புறப்பட்ட டிரான்ஸ் ஆசியா விமானம், அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள கீலுங் ஆற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து, தைவான் விமான பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள தரவுகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. விமானிகள் கடைசி நேரத்தில் தங்களுக்குள் பேசியதை வைத்து அதிகாரிகள் தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் 2 இயந்திரங்கள் கொண்ட ஏடிஆர் ரக விமானமாகும். அது புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே அதன் முதல் இயந்திரம் செயலிழந்துள்ளது. இதனால் விமானிகளின் அறையில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
உடனடியாக விமானிகள் இருவரும் பழுதான இயந்திரத்தை அணைப்பது குறித்து உரையாடியுள்ளனர். அப்போது பழுதான முதல் இயந்திரத்துக்கு செல்லும் மின் தொடர்பை துண்டிப்பதற்குப் பதிலாக நன்றாக இயங்கி கொண்டிருந்த மற்றொரு இயந்திரத்துக்கு செல்லும் மின் தொடர்பை துண்டித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் சில நொடிகளில் விமானத்தின் இரண்டாவது இயந்திரமும் செயலிழந்துள்ளது என விசாரணை அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விமானப் போக்குவரத்து வல்லுநரான டேவிட் லியர் மவுண்ட், “விமானிகள் பழுதான இயந்திரம் எது என்று தெரியாமல் நல்ல நிலையில் உள்ள இயந்திரத்தை அணைத்ததே விபத்துக்குக் காரணம்,” என்று கூறியுள்ளார்.
மேலும் சில விமானத்துறை வல்லுநர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.