தைபே, பிப்ரவரி 6 – தைபே அருகே கீலுங் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான டிரான்ஸ் ஆசியா விமானத்தின் விமானி, இறுதி நிமிடம் வரை போராடியிருப்பதற்கு ஆதாரமாக, விமானத்தில் ‘ஜாய்ஸ்டிக்’ என்று அழைக்கப்படும் இயக்கும் கருவியை பிடித்த நிலையிலேயே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட விமானிகள் அறையிலேயே துணை விமானியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமானி லியாவ் சின் சங்(வயது 42) மற்றும் துணை விமானியின் கால்கள் கடுமையாக சேதமடைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இயந்திரக் கோளாறு காரணமாக கட்டிடங்களுக்கு நடுவில் தாறுமாறாக பறந்த விமானத்தை தரையிறக்க, கடினமாகப் போராடிய விமானியின் முயற்சி, துரதிருஷ்டவசமாக தோல்வியடைந்து இறுதியில் விமானம் ஆற்றில் இறங்கியது.
58 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் 33 பேர் இறந்தனர். 15 பேர் உயிர் தப்பினர். மீதமுள்ள 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், விமானம் கட்டிடங்களில் மோதியிருந்தால் இன்னும் அதிகமான உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.