பெய்ஜிங், பிப்ரவரி 6 – சீனா-இலங்கை இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடைய வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என சீன அதிபர் ஜி ஜிங்பிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 67-வது சுதந்திரம் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு, சீன அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் “சீனாவும், இலங்கையும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகள். இரு நாடுகளிடையே வலுவான உறவு நீடிக்கிறது. எதிர்காலத்தில் அது மேலும் வலுவடைய வேண்டும். இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நீடித்த ஒத்துழைப்பு நிலவ வேண்டும்”.
“அதற்கான வாய்ப்புகள் வரும் காலத்திலும் ஏற்படும் என நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் எனது இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை மக்கள் காட்டிய அன்பு என்னை நெகிழச்செய்தது”.
“இலங்கையுடனான உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. இரு நாடுகளிடைய பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் நட்புறவு அடிப்படையில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறிசேனா தலைமையிலான புதிய அரசு இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஜிங்பிங்கின் வாழ்த்து அறிக்கை சீனாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.