Home இந்தியா டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? – நாளை தேர்தல்!

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? – நாளை தேர்தல்!

623
0
SHARE
Ad

secvpfபுதுடெல்லி, பிப்ரவரி 6 – 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க பிரச்சாரம் மேற்கொண்டது.

ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியோ, இந்த தேர்தலிலாவது ஆறுதல் வெற்றி கிடைத்து விடாதா என தவிக்கிறது.

673 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தாலும், பாரதீய ஜனதாவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியிலும், பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட, முன்னிறுத்தப்பட்டுள்ள அஜய் மக்கான், சாதர் பஜார் தொகுதியில் நிற்கிறார்.

ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் என 3 கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை வசீகரித்து ஓட்டுகளை வாங்கும் விதத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளன.

கடந்த 15 நாட்களாக நடந்து வந்த தீவிர பிரச்சாரத்தில் அனல் பறந்தது. பாரதீய ஜனதாவுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உமா பாரதி, வெங்கையா நாயுடு மற்றும் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரம், முழுக்க முழுக்க அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சார்ந்துதான் இருந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் களமிறங்கி பிரச்சாரம் செய்தனர்.

வழக்கம்போல தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் நடந்தன. 8 கருத்துக்கணிப்புகளில் 4-ன் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாகவும், 3-ன் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.

ஒரு கருத்துக்கணிப்பு முடிவு, இவ்விரு கட்சிகளும் சமபலத்தில் வரும் எனவும் கூறுகிறது. இந்த நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இந்த தேர்தலில் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள், வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 11 ஆயிரத்து 763 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னணு ஓட்டு எந்திரங்களின் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பலத்த பாதுகாப்புடன் நாளை 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

மாலை 6 மணிக்கு முடிகிறது. பதிவாகிற ஓட்டுகள் 10-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே, டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.