கொழும்பு, பிப்ரவரி 10 – இலங்கைக்கு வருமாறு ஐநா மனித உரிமை ஆணையர் சையது அல்-ஹுசைனுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டதாக உலக நாடுகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் தெரிவித்திருந்தன.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், இலங்கை அரசு மீது மனித உரிமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றின. எனினும், அப்போதைய ராஜபக்சே அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், அங்கு சிறிசேனா தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மனித உரிமை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இலங்கை துணைப் அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஐ.நா. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐநா மனித உரிமை ஆணையருக்கு இலங்கை சார்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா அழைப்பு விடுத்துள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த தருணத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.