கோலாலம்பூர், பிப்ரவரி 9 – சங்கங்கங்களின் பதிவிலாகாவில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பல மஇகா கிளைகள் தேர்தல் ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பதை சங்கங்களின் பதிவிலாகா உறுதிப்படுத்தியுள்ளதை உள்துறை அமைச்சரே இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் வாயிலாக அறிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், “இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் என்பதை அமைச்சு உறுதிசெய்துள்ளது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் விளைவாக தற்போது சங்கங்களின் பதிவிலாகா கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நடந்த மஇகா தேர்தலை செல்லாது என அறிவித்திருப்பதோடு, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் தவறுகளாலும், முறையற்ற தலைமைத்துவத்தினாலும் மஇகா தண்டிக்கப்பட்டு வருகின்றது.எனவே சங்கங்களின் பதிவிலாகாவின் சட்டதிட்டங்களை மீறியதற்காக பழனிவேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தண்டிக்கப்பட்டால், சங்கங்களின் சட்டம் பிரிவு 9ஏ-ன் கீழ் அவர் மஇகாவில் வகித்து வரும் பதவிகளை இழக்கவும் கூடும். அவர் மீது அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புண்டு” எனவும் வேள்பாரி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
“அமைச்சரான பழனிவேல் மன்னரின் முன்னிலையில், அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றுவேன் என எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணங்களை மீறியுள்ளார். இது போன்று இனி வரும் காலங்களில் எந்த ஒரு தவறும் ஏற்படாத வகையில், பழனிவேல் தனது அமைச்சர் மற்றும் மஇகா தேசியத் தலைவர் பதவிகளில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” இவ்வாறு வேள்பாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.